×

தமிழக அருங்காட்சியக காப்பாட்சியர்கள் கொல்கத்தா பயணம் மாநில அரசு அருங்காட்சியகங்களை மேம்படுத்தும் பொருட்டு

வேலூர், பிப்.6: தமிழக அரசு அருங்காட்சியகங்களை மேம்படுத்துவது தொடர்பாக அறிவதற்கு காப்பாட்சியர்கள் 6 பேர் முதல்கட்டமாக கொல்கத்தா அருங்காட்சியகம் சென்றுள்ளனர். தமிழகத்தில் சென்னை எழும்பூர் தலைமை அருங்காட்சியகத்தை தவிர கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர், விருதுநகர் உட்பட 20 அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. இதில் நுழைவுக்கட்டணமாக உள்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஒருவருக்கு ₹5 கட்டணமாகவும், வெளிநாட்டவர்களுக்கு ₹100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அருங்காட்சியகங்களில் தொன்மை சின்னங்கள், பழங்கால கற்சிலைகள், உலோக சிலைகள், கல்வெட்டுக்கள், நடுக்கற்கள், பழங்கால நாணயங்கள், ஓவியங்கள், பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள், ஓவியங்கள், தாவரங்கள், ஆயுதங்கள், கற்கால ஆயுதங்கள், கலை பொருட்கள் என காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமின்றி, உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், நாட்டிலேயே முதன்மை அருங்காட்சியகமான கொல்கத்தா அருங்காட்சியகம் அனைத்து நிலைகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதால் அவற்றை அடிப்படையாக கொண்டு தமிழக அருங்காட்சியகங்களை மேம்படுத்தும் நோக்கில் மாநில அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்களை கொல்கத்தா அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைக்க மாநில தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர், காஞ்சிபுரம் உட்பட 6 காப்பாட்சியர்கள் முதல் குழுவாக கொல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் ஒரு வார காலம் தங்கி அருங்காட்சியகத்தை மேம்படுத்துவது தொடர்பான தகவல்களை அறிவர். தொடர்ந்து படிப்படியாக காப்பாட்சியர்கள் கொல்கத்தா அனுப்பி வைக்கப்படுவர் என்று அருங்காட்சியகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu Museum Archives ,state museums ,Kolkata ,
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?