×

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள் 3 மாவட்டத்தின் பாசன தேவைக்காக

தண்டராம்பட்டு, பிப்.6: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக, சாத்தனூர் அணையில் இருந்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தண்ணீரை திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் அமைந்துள்ள சாத்தனூர் அணை நீர்பாசனத்தை நம்பி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் விவசாயம் நடக்கிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவைத்தார். இதையடுத்து, இடது மற்றும் வலதுபுற கால்வாய்களில் தண்ணீர் பாய்ந்தோடியது.

அப்போது, கலெக்டர் கந்தசாமி, டிஆர்ஓ ரத்தினசாமி, செயற்பொறியாளர் மகேந்திரன், தாசில்தார் நடராஜன், பிடிஓக்கள் முருகன், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:சாத்தனூர் அணையின் வலதுபுற பாசன கால்வாய் வழியாக வினாடிக்கு 453.60 கனஅடி, இடதுபுற பாசன கால்வாய் வழியாக 302.40 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதிக்கு வழங்க வேண்டிய பங்கீடு அடிப்படையில் 1,200 மில்லியன் கனஅடி தண்ணீரை, விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப ஒரே தவணையில் வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் திறக்கப்படுகிறது.

சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 12,543 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறும். மேலும், 2 கால்வாய்கள் மூலம் 250 கன அடி தண்ணீர் தொடர்ந்து 35 நாட்களுக்கு திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் 88 ஏரிகளில் சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீரை அனைவரும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். (கேப்சன்) சாத்தனூர் அணையில் இருந்து நேற்று, 3 மாவட்டத்தின் பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. உள்படம்: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தண்ணீரை திறந்து வைத்தார். உடன் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, டிஆர்ஓ ரத்தினசாமி.

Tags : Sathanur Dam ,district ,
× RELATED முதல்வர் கோரிக்கையை பிரதமர் ஏற்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்