×

பொங்கலுக்கு விற்பனையாகாத செங்கரும்பை டன் ₹1,000க்கு சர்க்கரை ஆலை கொள்முதல்: விவசாயிகள் கவலை

இடைப்பாடி, பிப்.6: பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி, இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த செங்கரும்பு விற்பனையாகாமல் தேங்கியது. இந்த கரும்பை அவிநாசியில் உள்ள சர்க்கரை ஆலை டன் ஒன்றை ₹1000க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், மூலப்பாறை, கலர்பட்டி, ஓடசக்கரை, பில்லுக்குறிச்சி, தெற்கத்திக்காடு, காட்டுவளவு, நாவிதன்குட்டை, நெடுஞ்குளம் காட்டூர், கோனேரிப்பட்டி, பூமணியூர், காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், தேவூர், செட்டிப்பட்டி, அம்மாபாளையம், தண்ணீர் தாசனூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி ஆயிரம் ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்தனர். இதில் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளில் பரிசுத்தொகுப்பு வழங்க, 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த செங்கரும்பை கூட்டுறவு சங்கத்தினர், ₹12 முதல் ₹15 வரை விலையில் கொள்முதல் செய்தனர்.
இது தவிர, வியாபாரிகள் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக செங்கரும்பை ₹5 முதல் ₹10 வரை விலை பேசி கொள்முதல் செய்தனர். ஆனால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்து செங்கரும்பு விற்பனையாகாமல் தேங்கியது. வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு கேட்டதால் விவசாயிகள் விற்பனை செய்யவில்லை.

இந்நிலையில், இந்த செங்கரும்பு வீணாகும் நிலைக்கு சென்றது. இதையடுத்து விவசாயிகள் செங்கரும்பு டன் ஒன்றை ₹1000க்கு அவிநாசியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அனுப்புகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு ஏக்கரில் செங்கரும்பு பயிரிட ₹90 ஆயிரம் வரை செலாகிறது. இடைப்பாடி பகுதியில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு விற்பனையாகாமல் தேங்கியது. பொங்கல் பண்டிகையின் போது குறைந்த பட்சமாக கரும்பு ஒன்று ₹5 வரை கொள்முதல் செய்தனர். தற்போது அவிநாசியில் உள்ள ஆலைக்கு கரும்பு ஒன்றை ₹1.50 விலைக்கு பேசி, டன் ₹1,500க்கு விற்பனை வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். இதனால் கரும்பு விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்