×

தேன்கனிக்கோட்டையில் விளைச்சல் அதிகரிப்பால் ரோஜா விலை வீழ்ச்சி

தேன்கனிக்கோட்டை, பிப்.6: தேன்கனிக்கோட்டை பகுதியில் ரோஜா விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தேன்கனிக்கோட்டை,  தளி, கெலமங்கலம் பகுதியில் திறந்த வெளியில் சொட்டு நீர் பாசன முறையில்  ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது. தேன்கனிக்கோட்டையிலிருந்து  திருச்சி, மதுரை, திண்டுக்கல், கேரளா, ஐதரபாத் ஆகிய பகுதிகளுக்கு தினமும்  நூறுக்கும் மேற்பட்ட மினி லாரிகளில் ரோஜா மலரை மொத்த வியாபாரிகள் எடுத்து  செல்கின்றனர். நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாரல் மழை, அதிக பனி பொழிவு  காரணமாக ரோஜா செடிகளில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதித்தது.  அதனால், குறைந்த அளவே ரோஜா மலர்கள் கிடைத்ததால் ஒரு கிலோ ரோஜா ₹150 வரை  விலை உயர்ந்தது. பொங்கல் பண்டிகை கழித்து இரவில் பனியும், பகலில் வெயில்  என ரோஜாவுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவியதால் ரோஜா செடிகள் துளிர் விட்டு  பூக்க தொடங்கியுள்ளன. தற்போது விளைச்சல் அதிகரித்ததால் கிலோ ₹30ஆக  குறைந்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேலும் விளைச்சல் அதிகரித்தால்  உரிய விலை கிடைக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED நர்சிங் மாணவி கடத்தல் வாலிபர் மீது புகார்