×

சைக்கிள் பயணமாக வந்த ராணுவ வீரர்கள்: படை பிரிவில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

கிருஷ்ணகிரி, பிப்.6: ராணுவத்தில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தி, சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ வீரர்கள் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர். கேப்டன் நரேந்திர பஞ்சால் தலைமையில் 14 ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் சைக்கிள் பயணமாக அசாம் மாநிலம் ஜெய்சால்மரிலிருந்து விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். அவர்கள் ஜோத்பூர், பெல்காம், பாகல்கோட், செகந்திராபாத், வாரங்கல், விசாகப்பட்டிணம், காக்கிநாடா, வேலூர் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக நேற்று மாலை கிருஷ்ணகிரியை வந்தடைந்தனர். கிருஷ்ணகிரியில் உள்ள ராணுவ மருத்துவமனை வளாகத்தில் அவர்களுக்கு, மருத்துவமனை பொறுப்பு அலுவலர் கேப்டன் சீனிவாசன் தலைமையில் மேஜர் சுந்தர்ராஜன், ஓய்வு பெற்ற கேப்டன்கள் சின்னப்பன், போஜராஜன் ஆகியோர் வரவேற்பளித்தனர்.

விழிப்புணர்வு சைக்கிள் பயணம் குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை சந்தித்தல், அவர்களுக்கு உரிமையான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து தெரிவித்தல், தென் மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை ராணுவத்தில் சேர ஊக்குவித்தல் உள்பட பல்வேறு விழிப்புணர்வை இந்த சைக்கிள் பயணம் மூலம் ஏற்படுத்தி வருகிறோம். நாளை (இன்று) கிருஷ்ணகிரி டான் போஸ்கோ பள்ளி மாணவர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். தொடர்ந்து பெங்களூர், கொல்லம் வழியாக ஜெய்சால்மருக்கு செல்கிறோம். தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் 1401 கி.மீ பயணிக்கிறோம். மொத்தமாக 6063 கி.மீ சைக்கிள் பயணத்தை மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Soldiers ,forces ,
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...