×

ராஜபாளையம் ஆர்.ஆர் நகரில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு

ராஜபாளையம், பிப். 6: ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் உள்ள 42வது வார்டில் ஆர்.ஆர். நகர் உள்ளது. இப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 8வது தெருவில் நகராட்சி பூங்காவை சுற்றி, வீடுகளுக்கு முன்பாக கழிவுநீர் குளம்போல தேங்கி உள்ளது. சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள பொன்னகரம் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர், ஓடை  வழியாக இப்பகுதிக்கு வருகிறது. இங்கிருந்து ஆர்.ஆர்.நகரின் மெயின் ரோட்டுக்கு அடுத்துள்ள கால்வாயில் சென்று கழிவுநீர் சேர வேண்டும். ஆனால், இந்த கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக வாறுகாலாக மாறிவிட்டது. இதனால், கழிவுநீர் செல்ல போதுமான வழியின்றி வீடுகளுக்கு முன் குளம்போல தேங்குகிறது. இதில் கொசுக்கள் உருவாகி, துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், பூங்காவினுள் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்கள் கொசு உற்பத்தி கூடமாக உள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கண்ணன் ராஜா கூறுகையில்,  ‘குடியிருப்புகளுக்கு முன் தேங்கும் கழிவுநீரால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் உருவாகும் கொசுக்களுக்கு பயந்து ஜன்னல் கதவுகளை மூடியுள்ளோம். கைக்குழந்தைகள், முதியவர்கள் வெளியே வர முடியவில்லை. மழை காலங்களில் பல முறை வீட்டின் வாசல் வரை கழிவுநீர் வந்து விடுகிறது. தகுந்த வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் இப்பகுதி விவசாய பகுதியாக இருந்தது. தற்போது குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தொடர் ஆக்கிரமிப்புகளால் வாறுகால் சுருங்கி விட்டது. இதனால், கழிவுநீ–்ர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இது குறித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘10 அடி அகலத்திற்கு மேல் இருந்த ஓடை ஆக்கிரமிப்பால் தற்போது அகலம் குறைந்து விட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கழிவுநீர் முறையாக வெளியேற வழி அமைக்கப்படும்’ என்றனர்.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...