×

கம்பம்-கூடலூர் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் ஆபத்து கவனிப்பாரா கலெக்டர்?

கம்பம், பிப்.6: கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்துப்பாட்டில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக்கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுபவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பின்பு வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களான சிரிஞ்சுகள், ஊசிகள் மற்றும் சீழ்துடைக்கப்பட்ட பஞ்சுகள், கையுறைகள் அனைத்தும் மருத்துவக்கழிவு எனப்படுகிறது. இம்மருத்துவக்கழிவுகளில் காலாவதியான மருந்துகள், வேதிப்பொருள் கழிவுகள், ஆய்வகக் கழிவுகள் மஞ்சள் நிறப்பையிலும், கெட்டுப்போன மருந்துப்பொருள்கள், ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்ச், கையுறைகள் சிவப்பு நிறப்பைகளிலும், கத்தி, உடைந்த கண்ணாடி போன்றவை வெள்ளை நிற பைகளிலும், கண்ணாடிப் பொருள்கள், மரப் பெட்டிகள் போன்றவற்றை நீல நிறப் பெட்டிகளிலும் நான்கு விதமாகத் தரம் பிரித்துச் சேகரிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

இந்த கழிவுகளை ஒப்பந்த நிறுவனங்கள் மருத்துவமனைகளில் பெற்றுக்கொண்டு ட்ரீட்மென்ட் பிளான்ட்களில் இன்சினரேட்டர், மைக்ரோவேவ்ஸ் போன்ற எரிப்பான்கள் மூலம் உயர்வெப்ப நிலையில் எரித்தல் முறையிலும், மறு சுழற்சி முறையிலும், ஆழப் புதைப்பதன் மூலமும் அழிக்கப்படுகிறது. ஆனால், பல தனியார் மருத்துவமனைகள் இவ்விதிகளை பின் பற்றாமல் தங்கள் மருத்துவமனையில் பயன்படுத்திய ஊசி, ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்சு, மருந்து பாட்டில்கள்களை இரவு நேரங்களில் நெடுஞ்சாலையோரங்களில் கொட்டி விடுகின்றனர். கம்பம் பகுதியில் ஊசி, சிரிஞ்சு, மருந்து பாட்டில்கள் அடங்கிய மருத்துவ குப்பைக்கழிவுகள், கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், நகராட்சி குப்பை கிடங்கு செல்லும் வழி அருகே சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடை பயிற்சி செல்லும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதுபோல் இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் குப்பைக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது. வாகனங்கள் விரைவாக செல்லும் போது குப்பைக்கழிவுகள் பறந்து ரோட்டுக்கு வந்து விடுகிறது.

Tags : road ,Kumbam-Kudalur ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...