×

கூடுதல் உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

சிவகங்கை, பிப்.6: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உயர் ஆதரவு தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் முழு அளவில் பாதிக்கப்பட்டு எந்தப்பணியும் மேற்கொள்ள முடியாமல் இருந்த நிலையிலேயே உள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரத்து 500ல் இருந்து அதிகரித்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை வழங்குவதுடன் அவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை பெறுவதற்கான மருத்துவச் சான்றும் உடனடியாக வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகை மிகப் பயனுள்ளதாக இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க தேவையான பயிற்சி மற்றும் வங்கிக்கடன் வழங்கப்படுகின்றன. அதே போல் பசுமை வீடு திட்டத்தில் வீடு வழங்கவும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(மருத்துவம்) இளங்கோமகேஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் மற்றும் சிறப்பு மருத்துவர் குழுவினர் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Special Medical Camp for Disabled Persons for Additional Scholarship ,
× RELATED பராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம்...