×

மதுரையில் கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தில் 148 பேர் கைது

மதுரை, பிப். 6: மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சிறுமிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 150 வழக்குகளில் 148 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 18 வயதிற்கு குறைவான அனைத்துக் குழந்தைகளுக்கும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காக்க கொண்டு வரப்பட்டதுதான் போக்சோ சட்டம். 2012ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வரும் இச்சட்டம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கும், அதற்கான தண்டனைகளும் விதித்து வருகிறது. பள்ளி குழந்தைகள் மற்றும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுப்பது தமிழகத்தில் தற்போது அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். மேலும் பள்ளி மற்றும் பொது இடங்களில் போக்சோ சட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் மதுரை நகரில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டு மட்டும் மதுரை நகரில் 53 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 61 நபர்களும், புறநகரில் 75 வழக்குகளில் 85 பேர் என 128 வழக்குகளில் 146 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் 2019ம் ஆண்டு நகரில் 80 வழக்குகளும், புறநகரில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெற்றோர் அனைவரும் தங்களின் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் ஏதேனும் உள்ளதா அல்லது அவர்கள் எப்போது எல்லாம் தனிமையில் இருக்கின்றார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் குழந்தைகளிடம் அன்பாகவும் நல்ல நண்பர்களாகவும் பழகிட வேண்டும், அவர்களோடு அதிக நேரம் செலவிட வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் அன்றாடம் நடந்த நிகழ்வுகளை அவர்களிடம் மனம் விட்டு பேசி கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தைரியம் பற்றியும் தற்காப்பு கலைகள் பற்றியும் கற்று கொடுக்க வேண்டும். எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுரை வழங்க வேண்டும்’ என்றார்.

Tags : Madurai ,Pokso ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...