×

இலவச வீட்டு மனை பட்டாவிற்கு பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

மதுரை, பிப். 6: மதுரை மாவட்டத்தில் உள்ள வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் வினய் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘மதுரை மாவட்டத்தில் உள்ள வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நடவடிக்கைகள் ேமற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்தவர்கள், தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் தங்களது மனுக்களை கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) மூலம் உரிய விசாரணை செய்யப்பட்டு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் இடைத்தரகர்கள் சிலர் பொதுமக்களிடம் பணம் பெற்று கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா வாங்கித்தருவதாக ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று, ஏமாற்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே வீடற்ற ஏழை, எளிய மக்கள் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என்றார்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...