×

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்

திருப்பூர், பிப். 6:கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் உருவாகிய ெகாரோனா வைரஸ் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தும்மல் மூலம் எளிதில் பரவுவதால் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து 1,500க்கும் மேற்பட்டோர் கேரளாவிற்கு திரும்பி உள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் இது குறித்த பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும், கோவை, திருப்பூர் மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் இருப்பதால் திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகர் நல அலுவலர் டாக்டர் பூபதி அறிவுறுத்தலின் பேரில் 2ம் மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமையில் சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களிலும் சுத்தம் செய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்களை கொண்டு மேற்கொண்டனர். அப்போது பஸ்களில் உள்ள கைப்பிடி கம்பிகள், இருக்கை கைப்பிடிகள் ஆகியவை சோப்பு போட்டு (லைசால்) துடைக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் என்பது ஒருவகை தொற்று நோயாகவும், தொடுதல் மூலமாக பரவக்கூடியதாக உள்ளது. திருப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் பஸ்களில் அதிக அளவில் பயணிப்பதால் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பணி முதற்கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து திருப்பூர் முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கான அனைத்து தடுப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

Tags : Virus Precautions Corporation ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...