×

ரோஜா பூங்காவில் கவாத்து பணி துவக்கம்

ஊட்டி, பிப். 6:   கோடை  சீசனில் நடக்கும் ரோஜா கண்காட்சிக்கு பூங்காவை தயார்படுத்தும் வகையில்  ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணிகள் நேற்று  துவங்கியது. ஊட்டி தமிழகத்தில் உள்ள  புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். ஊட்டியில் நிலவும் இதமான குளு  குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில்  இருந்து வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள  தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களை பார்த்து  மகிழ்கின்றனர். கோடை சீசனான ஏப்ரல், மே மாதத்தில் ஊட்டிக்கு வரும்  சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். கோடை சீசனின்போது  சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர்  கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி,  படகு அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்  நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்தாண்டு கோடை சீசனுக்காக நீலகிரி  மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் தயராகி வருகின்றன.

 இதன் ஒரு பகுதியாக  ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவும் தயார் செய்யப்படுகிறது. இப்பூங்காவில் 4 ஆயிரத்து 201 வீரிய ரகங்களை கொண்ட சுமார் 31  ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. மேலும் இந்த ரோஜா  பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது. பாரம்பரிய ரோஜா  பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  பாரம்பரியம்மிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. ரோஜா கண்காட்சி தயார்படுத்தும் நோக்கில் பூங்காவில் உள்ள ரோஜா  மலர் செடிகளை கவாத்து செய்யும் பணிகள் நேற்று துவங்கியது. இப்பணிகளை மாவட்ட  கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். விரைவாக துளிர்விடும்  வகையில் வெட்டப்பட்ட பகுதியில் மருந்துகள் தெளிக்கவும் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இவை ஏப்ரல் மாதத்தில் பூக்க துவங்கிவிடும். ரோஜா  கண்காட்சி சமயத்தில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கும் என அதிகாரிகள்  தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம்  சாம்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,Rose Garden ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...