×

வெயில், பனியால் புடலங்காய் விளைச்சல் பாதிப்பு

பொள்ளாச்சி, பிப். 6:  பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில்,  புடலை, பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவை அதிகளவு  பயிரிடப்பட்டுள்ளது. நெகமம், கோமங்கலம், வடக்கிபாளையம், டி.நல்லிகவுண்டன்பாளையம், முத்தூர், சூலக்கல், வடக்கிபாளையம், பொன்னாபுரம், கோட்டூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பந்தல் காய்கறிகளில் விவசாயிகள் அதிகம் ஈடுபடுகின்றனர். இதில் மழை காலம் மட்டுமின்றி வெயிலின் தாக்கம் இருக்கும் போதும் புடலங்காய் விதைப்பில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டில் பெய்த தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி ஆகஸ்ட் மாதத்தில் விவசாயிகள் பலர் பந்தல் காய்கறியில் ஈடுபட்டனர். அவை நவம்பர் மாதத்தில் நல்ல விளைச்சலடைந்த நிலையில் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு அதிகளவு கொண்டுவருவது தொடர்ந்தது.

இரண்டு மாதத்திற்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட புடலங்காயானது, வளர்ச்சியடைய துவங்கியுள்ளது. தற்போது  மழை இல்லாமல் இருந்தாலும் விவசாயிகள் பலர் சொட்டுநீர் பாசனம் கொண்டு விளைச்சலை அதிகரிக்க துவங்கினர். ஆனால், கடந்த சில வாரமாக பகல் நேரத்தில் வெயிலும், அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவும் இருப்பதால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு பந்தல் காய்கறிகள் வாடி வதங்குகிறது. இதில் முத்தூர், தாளக்கரை, சூலக்கல் உள்ளிட்ட பல இடங்களில் விளைச்சலுக்கு தயாரான புடலங்காயானது வாடி வதங்கியபடி உள்ளது. இதனால் அந்த காய்களை அறுவடை செய்யாமல் விட்டு சென்றுள்ளதால், அவை தானாகவே பழுத்து கீழே விழுவதால் நஷ்டம் உண்டாவதாக  விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Tags :
× RELATED முதல்வருக்கு நன்றி தெரிவித்து நா.கார்த்திக் அறிக்கை