×

கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையிலிருந்து கோவைக்கு நடைபயண போராட்டம் நடத்த திட்டம்

வால்பாறை, பிப்.6: குடியிருக்க வீடு, பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வால்பாறை காந்தி சிலையில் இருந்து கோவை கலெக்டர் அலுவலகம் வரை நடைபயண போராட்டம் நடத்த உள்ளதாக பழங்குடியினர் அறிவித்து உள்ளனர்.
காடர், முதுவர், மலைமலசார், மலசார், இவாளர், புலையர் என ஆறு வகையான பழங்குடியினர் வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பக வனபகுதிகளில் வசித்துவருகின்றனர். புலிகள் காப்பக புதிய சட்ட  நடைமுறைகள், புதிய  திட்டங்கள், புதிய அதிகாரிகளால் பழங்குடி மக்களின் வாழ்வாதாரமும் உரிமைகளும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், குடியிருக்க வீடு, விவசாய நிலத்திற்கு வன உரிமைச்சட்டப்படி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், கல்லார் எஸ்டேட் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட் வனப்பகுதியில் உள்ள காடர் இன குடியிருப்பு கிராமத்திற்கு மாற்று இடம் வழங்க வேண்டும், பழங்குடியின கிராமங்கள் வருவாய் கிராமங்களாக மாற்றப்பட்டு, குடிநீர், சாலை, மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகள் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி வால்பாறையில் இருந்து கோவைக்கு நடைபயண போராட்டம் நடத்த உள்ளதாக பழங்குடியின போராட்ட குழுவினர் அறிவித்து உள்ளனர். மேலும் இதில் 600 பேர் வரை பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : walk ,Valparai ,Coimbatore ,
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...