×

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் செண்டுமல்லி விலை கடும் வீழ்ச்சி

சத்தியமங்கலம், பிப்.6: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் செண்டுமல்லி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் விவசாயிகள்  5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளனர். 4 மாத கால பயிரான செண்டுமல்லி தனியாகவும் வாழையில் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. இந்த பூக்கள் பறிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மைசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த மாதம் செண்டுமல்லி  கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது. படிப்படியாக விலை குறைந்து நேற்று கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பூப்பறிக்க ஆள்கூலிக்கு கூட கட்டுபடியாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் நஷ்டத்தை தவிர்க்க  பூக்களை பறிக்காமல் செடியில் அப்படியே விட்டுள்ளனர். பூக்களை பறிக்க பெண் வேலையாள் ஒருவருக்கு தினக்கூலி ரூ.250 வழங்கப்படுகிறது. தற்போது, பூ விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் ஆள்கூலி கூட வழங்கமுடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி இனி செண்டுமல்லி பயிரிடுவதை தவிர்க்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags : Senthumalli ,Sathyamangalam ,flower market ,
× RELATED சித்திரை மாத பிறப்பை ஒட்டி தோவாளை மலர்...