×

முக்கிய இடங்களில் ‘கியூ ஆர்’ பார்கோடுடன் கூடிய பேனர்கள் வேலூர் மாநகரம் வாழ்வதற்கு சிறந்த நகரமா?

* கருத்து கணிப்பில் ஆர்வத்துடன் பங்கேற்கும் மக்கள்

வேலூர், பிப்.4: வேலூர் மாநகரம் வாழ்வதற்கு சிறந்த நகரமா? என்ற மத்திய அரசு நடத்தும் கருத்து கணிப்பு கேட்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடம் பெற்ற வேலூர் மாநகரில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பட்டியலில் இடம்பெற்ற நகரங்களில் பொதுமக்களின் கருத்துக்களை அறிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி, வேலூர் மாநகரில் ‘கியூ ஆர்’ பார்கோடுடன் கூடிய பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இப்பேனர்களில் ‘தங்கள் மாநகரம் வாழ்வதற்கு சிறந்ததா? என்பதற்கான கருத்துக்களை பேனரில் உள்ள ‘கியு ஆர்’ பார்கோடை மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

அப்போது நம்மிடம் நகரில் குடிநீர் வினியோகம் சரியாக நடக்கிறதா? திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா? என்பது உட்பட 24 கேள்விகள் கொண்ட பட்டியல் வரும். அக்கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள் மத்திய அரசுக்கு சென்று சேரும்.

இதன் மூலம் நகர மக்களின் நடுநிலையான கருத்துக்களை பெற்று அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால் மத்திய அரசு இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளது. இந்த பதில்கள் கடந்த 1ம் தேதி தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை பெறப்படுகிறது.

ஆகவே, வேலூர் மக்கள் தங்கள் பதில்களை தவறாமல் வழங்க வேண்டும். இப்போது வரை ஏறக்குறைய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அனைவருமே இந்த ஏற்பாட்டில் பங்கேற்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags : Vellore ,areas ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...