×

ஆரணியில் போலி நகை வைத்து பணம் பறித்த பெண் கைது

ஆரணி, பிப்.4: ஆரணியில் நகை கடையில் போலி நகையை அடகு வைத்து பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணி பெரியக்கடை வீதி பகுதியை சேர்ந்த நாரயணன்(51), இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி அவருடைய கடைக்கு ஒரு பெண் 3 சரவன் அடகு வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அப்போது, கடை உரிமையாளர் நாரயணன் நகையை வாங்கி கொண்டு ₹70 ஆயிரம் தான் அதனுடைய மதிப்பு அதனால் ₹61 ஆயிரம் வரும் என நகையை பெற்றுக் கொண்டு பணத்தை கொடுத்துள்ளார். அந்த பெண்ணும் பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர், நாராயணன் நகைகளை எடுத்து மீண்டும் பரிசோதித்து பார்த்தார். அப்போது, அந்த நகை போலியானது என்று தெரியவந்தது. இதுகுறித்து, அவர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று அந்த பெண் மீண்டும் அதேபகுதியில் உள்ள ஒரு நகை கடையில் நகை எடுப்பது போல் வந்தார். அப்போது, தகவலறிந்த நாரயணன் மற்றும் கடை உரிமையாளர்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, போலீசார் விசாரித்ததில் கீழ்அரசம்பட்டு பகுதியை சேர்ந்த சுமதி(28), என்பது தெரியவந்தது. மேலும், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை கடையில் போலி நகை வைத்து பணம் பறித்ததும், மீண்டும் அதேபோல் நகை கடையில் பணம் பறிக்க வந்ததும் தெரிந்தது. பின்னர், டவுன் போலீசார் சுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : jewelery ,
× RELATED விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி...