×

கணவரின் காலை அடித்து உடைத்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூதாட்டி தர்ணா கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தஞ்சை, பிப்.4: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாபநாசம் அருகே சூலமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி தைலம்மாள்(65). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்தவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி கோரிக்கை மனு அளிக்க அறிவுரை கூறி அனுப்பினர்.

இந்நிலையில் தைலம்மாள் எஸ்.பி.யிடம் அளித்த மனுவில், எனது சொத்தை எனது 3 மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்துவிட்டேன். அதன்பிறகு என் பெயரிலும், எனது கணவர் தனபால் பெயரிலும் உள்ள ஓட்டு வீட்டில் நானும் எனது கணவரும் வசித்து வந்தோம். மேலும் எங்களுக்கு என்று 237 குழி நிலம் வைத்து சாகுபடி செய்து வந்தோம். இந்நிலையில் எனது மகன்கள் குமார், ரமேஷ் ஆகியோர் என்னையும், எனது கணவரையும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். வீடு இல்லாத நிலையில் தவித்து வருகிறோம். இது குறித்து கடந்த ஜனவரி 27ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், அய்யம்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி மதியம்  குமார், ரமேஷ் மற்றும் மஞ்சுளா ஆகியோர் எனது கணவரை அடித்து 2 கால்களையும் உடைத்து விட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். அய்யம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து போலீசார் வந்து விசாரித்துவிட்டு சென்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களை சரி செய்தால் உங்களுக்கு சரி செய்து கொடுக்கிறேன் என காவல் நிலையத்திலிருந்து பேரம் பேசுகிறார்கள். எனவே எனது கணவரை தாக்கி காலை உடைத்த எனது மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தைலம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

Tags : dharna collector ,sons ,Muthatti ,office ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...