×

பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் உடைப்பால் கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் கலக்கும் கழிவுநீர்

கும்பகோணம், பிப். 4: பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் உடைந்து கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்ட பொற்றாமரை குளம் உள்ளது. இந்த புனித குளத்துக்கு வரும் பக்தா்கள் சுகாதாரமாக நீராடுவதற்காக ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் 2016ம் ஆண்டு பணிகள் நடந்தது. குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டால் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் திறந்து விட்டனர். ஆனால் மீண்டும் தண்ணீர் இல்லாமல் வறண்டது.

சமீபத்தில் பெய்த மழையால் குளத்தில் தண்ணீர் தேங்கியது. ஆனால் அந்த தண்ணீரில் பாசிகள் படர்ந்து அசுத்தநீராக மாறியுள்ளது. இந்நிலையில் பொற்றாமரை குளம் தென்கரையில் உள்ள 5க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் உடைந்து கழிவுநீர் வழிந்தோடியது. பின்னர் குளத்தின் தென்பகுதியில் உள்ள மேன்ஹோல்கள் நிரம்பியதால் கடந்த 2 நாட்களாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி பொற்றாமரை குளத்தில் கலக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் பயனில்லை.

வரும் 5ம் தேதி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்கு வரும் பக்தர்கள் பலர் கும்பகோணம் பகுதி கோயில்களுக்கு வருவர். அப்போது புனித குளமான பொற்றாமரை குளத்தில் புனித நீராடுவர். தற்போது குளத்தில் சுகாதாரமற்ற தண்ணீரே உள்ளதால் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே பொற்றாமரை குளத்தில் உள்ள கழிவுநீரை அகற்றி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : break ,Kumbakonam Pottamarai ,
× RELATED திருவள்ளூரில் புனித ஆரோக்கிய அன்னை...