×

இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

புதுக்கோட்டை, பிப். 4: இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலை வசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 380 மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்தில் புலிவலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: திருமயம் ஊராட்சி ஒன்றியம் புலிவலம் ஊராட்சி தலைவராக கருப்பாயி உள்ளார். இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் கருப்பாயிக்கு பதிலாக அவரது மகன் சுப்பிரமணியன் நான் தான் பேசுவேன் என்றார். மேலும் ஊராட்சி மன்ற நிதிநிலை கேள்விகளுக்கும் சுப்பிரமணியன் பதில் அளித்தார். இந்த சுப்பிரமணியன் மிரட்டலின் காரணமாக தான் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடக்கவில்லை. எனவே எழுத படிக்க தெரியாத ஊராட்சி தலைவருக்கு பதிலாக செயல்படும் அவரது மகன் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களை தரக்குறைவாக பேசிய ஊராட்சி தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் அளித்த மனு: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொறுப்பற்ற பேச்சுகளால் அமைதி பூங்காவான தமிழகத்தை மதமோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் திருச்சியில் நடந்த கொலையை, போலீசார் முன்விரோத கொலை எனக்கூறிய பிறகும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொடுத்த பேட்டியில், இந்த கொலை இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்தார்கள் என கூறியுள்ளார். எனவே இந்திய இறையான்மைக்கு எதிராகவும், பதவி பிரமாண உறுதிமொழிக்கு எதிராகவும் செயல்படும் அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகள் அளித்த மனு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். எங்களை சமூக பாதுகாப்பு உதவித்தொகை திட்டத்தில் இருந்து மாற்றி பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற வருவாய்த்துறை அலுவலர்களிடம் சான்று பெற வேண்டுமென வற்புறுத்துகின்றனர். அவ்வாறு செய்தால் ஏற்கனவே பெற்றுவரும் உதவித்தொகை தடைபடுகிறது. எங்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்குதல் உறுதி செய்யப்பட்ட பிறகே பழைய உதவித்தொகையை ரத்து செய்ய வேண்டும். மேலும் உதவித்தொகை மாற்ற பணிகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் நேரடியாக செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Rajendra Balaji ,sovereignty ,Indian ,
× RELATED தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை...