×

பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பயணிகள் படுகாயம்

உடன்குடி, பிப். 4: உடன்குடி அருகே சாலையின் குறுக்கே பன்றி பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர், பயணிகள் படுகாயம் அடைந்தார். முதலுதவிக்கு பிறகு மேல்சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் அரசு மருத்துவமனையை மக்கள் முற்றுகையிட்டனர்.  உடன்குடி அருகே உள்ள  குலசேகரன்பட்டினத்தை சேர்ந்தவர் மாலிக்(35). இங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில்  ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு  பயணிகளை அழைத்து வந்து கொண்டிருந்தார். உடன்குடி ஒண்டிவீரன் நகர்  விலக்கில் ஆட்டோ வரும்போது சாலையின் குறுக்கே திடீரென பன்றி பாய்ந்தது. அதன் மீது ஆட்டோ மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் மாலிக் மற்றும் ஆட்டோவில்  வந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

அவ்வழியாக வந்தவர்கள், அவர்களை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர்  மேல்சிகிச்சைக்காக திருச்செந்தூர் அல்லது தூத்துக்குடி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விடுப்பில்  இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேல்சிகிச்சைக்கு அழைத்து செல்வதில்  தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தை கண்டித்து உடன்குடி அரசு  மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாடகை கார் மூலம் ஆட்டோ டிரைவர்  மாலிக் மற்றும் காயமடைந்த பயணிகள், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை  மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : passenger crashes ,
× RELATED புத்தூர் கருவேலாங்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் மது பாட்டிலால் குத்தி கொலை