×

அரசு பள்ளி மைதானத்தில் விளையாட அனுமதி வேண்டும்

நாமக்கல், பிப்.4: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மெகராஜிடம், வையப்பமலையை சேர்ந்த இளைஞர்கள் அளித்த புகார் மனு விபரம்:
வையப்பமலையில் செயல்பட்டு வரும் அரசுமேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில், நாகர்பாளையம் மற்றும் மரப்பரை கிராமத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் விடுமுறை நாட்களில் விளையாடி வருகிறார்கள். தற்போது உள்ள தலைமையாசிரியர் திடீரென வெளியாட்களை மைதானத்தில் விளையாட அனுமதிப்பதில்லை. இதனால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. மைதானத்தில் தினமும் காலை 5 மணிமுதல் 7 மணி வரை உடற்பயிற்சி மற்றும் விளையாடி வருகிறோம்.

விடுமுறை நாட்களில் கபாடி, கிரிக்கெட், கோகோ போன்ற குழு விளையாட்டுகளை கடந்த 25 வருடமாக விளையாடி வந்தோம்.ஆனால் திடீரென பள்ளி தலைமையாசிரியை பள்ளி மைதானத்தில் விளையாட கூடாது என தடை விதித்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ஊர் மக்களை இழிவாக பேசி மது அருந்துவதாக எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறார். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்த போது, அவர் பள்ளியில் தவறு செய்பவர்களை கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா வைத்து தருவதாகவும், இனிமேல் தவறு நடந்தால் தானே பொறுப்பேற்று கொள்வதாகவும் கூறினார். ஆனாலும், தலைமையாசிரியர் அனுமதி அளிக்கவில்லை.  
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் அனுமதி அளித்தும், அவர் ஏற்க மறுக்கிறார். எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட அனுமதி பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : state school grounds ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்