×

தர்மபுரி மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை சரிவு

தர்மபுரி, பிப்.4: தர்மபுரி மாவட்ட சந்தைகளுக்கு சின்னவெங்காயம், பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்தது. மக்கள் ஆர்வத்துடன் கூடுதலாக வாங்கி சென்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெரிய வெங்காயம் அறுவடை செய்யப்பட்டுள்ளதால், சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயம் பதுக்கல் குறைந்துள்ளது. இதனால் சந்தைகளுக்கு பெரிய வெங்காயம் தடையில்லாமல் வரத்துள்ளது. இதனால் விலை சரிந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த மாதம் 1ம் தேதி ₹95 முதல் ₹100க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று தர்மபுரி உழவர் சந்தையில் ஒருகிலோ பெரிய வெங்காயம் ₹34 முதல் ₹38 வரை விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயம் விலை குறைவால், மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதுபோல் சின்ன வெங்காயம் கடந்த மாதம் 1ம் தேதி அதிகபட்சமாக ₹110க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ₹40 முதல் ₹50க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தர்மபுரி சந்தைக்கு பெரிய வெங்காயம் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. இதனால் அதிகபட்சம் ஒரு கிலோ ₹38ஆக குறைந்துள்ளது. சின்னவெங்காயம் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் வெங்காய விலை சரிந்த நிலையிலேயே உள்ளது. சின்ன வெங்காயம் ஒருகிலோ ₹50க்கு விற்பனை செய்யப்பட்டது,’ என்றனர்.

Tags : Dharmapuri district ,
× RELATED நாசிக் மொத்த சந்தையில் ஏலம் நிறுத்தம்: வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது