×

எம்எல்ஏ பேச்சுவார்த்தையால் அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டி மீண்டும் செயல்பட துவங்கியது

திருக்கோவிலூர், பிப். 4: திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளை பொருட்களை அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எடுத்து வந்து விற்பனை செய்து வந்தனர். கடந்த இரண்டு மாதமாக இந்த விற்பனை கூடத்தில் நிர்வாக சீர்கேட்டினால் பல்வேறு பிரச்னைகள் இருந்துள்ளதாக தெரிகிறது. இதில் குறிப்பாக விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வங்கியில் செலுத்தாமல் காலதாமதமாக பணம் செலுத்தப்படுவதாக விவசாயிகள் குறை கூறி வருகின்றனர்.  

இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக சில வியாபாரிகள் விவசாயிகளின் பணத்தை ஏமாற்றிவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில்  கடந்த மாதம் 20ம் தேதி முதல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், கம்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு உரிய பணம் செலுத்தப்படாமல் உள்ளது. மேலும் சுமைதூக்கும் தொழிலாளர்களும் கூலியை உயர்த்தி தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த 28ம் தேதி முதல் மூடப்பட்டது. மேலும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு பணம் தரக்கோரியும், தானியங்களை கொள்முதல் செய்யக்கோரி  கடந்த 10 நாட்களில் மூன்று முறை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. தகவல் அறிந்த திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி கடந்த நான்கு நாட்களுக்கு முன் விற்பனை கூடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.இந்நிலையில் நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்த பொன்முடி எம்எல்ஏ விற்பனை கூட அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது ரூ.3.5 கோடி ரூபாய் கமிட்டிக்கு பணம் பாக்கி உள்ளதால் வியாபாரிகள் இரண்டு நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், செலுத்தாவிட்டால் வியாபாரிகள் லைசென்சை ரத்து செய்யகோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வெளியூர் வியாபாரிகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஏலம் விட அனுமதிக்கக்கோரி அதிகாரிகளிடம் கூறினார். மேலும் விவசாயிகளிடம் தானியங்களை கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து நேற்று முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மீண்டும் செயல்பட துவங்கியது. இதில் கண்டாச்சிபுரம் தாசில்தார் ஜெயலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர் பிரபு, வக்கீல் அன்பு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : talks ,MLA ,Arakkantanallur Market Committee ,
× RELATED கொரோனா தடுப்பு விழிப்புணர்வுப்...