×

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

புதுச்சேரி,  பிப். 4: புதுவையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர்கள் 14 மாத நிலுவை  சம்பளத்தை கேட்டு திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால்,  உழவர்சந்தைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு பொருட்கள் வாங்க வந்த  பொதுமக்கள் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   புதுச்சேரியில் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் தட்டாஞ்சாவடி, கரையாம்புத்தூர்,  கூனிச்சம்பட்டு, கன்னியகோயில், மடுகரை, மதகடிப்பட்டு உள்ளிட்ட 6 இடங்களில்  ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 165 பணியாளர்கள்  வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது கண்காணிப்பின்கீழ் புதுச்சேரி  பழைய பஸ் நிலையம் மற்றும் லாஸ்பேட்டையில் உழவர்சந்தைகள் செயல்பட்டு  வருகின்றன.

இதனிடையே 2018 டிசம்பர் முதல் 2020 ஜனவரி மாதம் வரையிலான 14  மாத சம்பளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்கக்கோரி பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏஐடியுசி விற்பனைக்குழு ஊழியர்கள் நலச்சங்கத்தினர்  அறிவித்திருந்தனர்.

 அதன்படி நேற்று 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சங்க  தலைவர் பாஸ்கரபாண்டியன், செயலாளர் சண்முகம், செயல்தலைவர் துரை.செல்வம்  ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் 2 குழுக்களாக தனித்தனியாக பிரிந்து  அதிகாலையிலே உழவர்சந்தை முன்பு திரண்டனர். அங்கு விளை பொருட்களை  விற்பனைக்கு எடுத்து வந்திருந்த விவசாயிகளுக்கு, இவர்கள் கடை ஒதுக்கீடு,  விலை நிர்ணயம், எடைக்கல் வழங்கல் உள்ளிட்ட எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. கடைகளை திறக்க முடியாமல் அவற்றுக்கு  பூட்டு போட்டு,  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தங்களது விளை  பொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் ஒருசிலர்  எடைகற்கள் எதுவுமின்றி தங்களது விளை பொருளை சாலையோரம் கூறுபோட்டு விற்றனர்.

  இருப்பினும் பழைய பஸ் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகள், லாஸ்பேட்டையில்  40க்கும் மேற்பட்ட கடைகள் இயங்காததால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க உழவர்சந்தைக்கு வந்த பொதுமக்களில் பலர்  ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அப்போது லாஸ்பேட்டையில் பொருட்கள்  வாங்க வந்த பொதுமக்கள், ஏன் கடைகளை திறக்க தடைபோடுகிறீர்கள் என கேட்டு  அங்கிருந்த ஒழுங்கமுறை விற்பனைக்கூட ஊழியர்களிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர்.

 இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு விரைந்து  வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணி வரை 2  உழவர்சந்தைகளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட  பணியாளர்கள் பின்பு அங்கிருந்து தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை  கூடத்துக்கு வந்தனர். அங்கும் பணிகளை அவர்கள் புறக்கணித்தனர். இதன் காரணமாக  புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு  வந்திருந்த ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் எடை போட முடியாமல் தேங்கிக்  கிடந்தன. கொள்முதலுக்கு வந்திருந்த விவசாயிகளும் ஏமாற்றமடைந்தனர்.

  பின்னர் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகே சம்பள பிரச்னைக்கு அரசு தீர்வு  காண வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ஏஐடியுசி அபிஷேகம், சேதுசெல்வம் ஆகியோர்  வாழ்த்தி பேசினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 70க்கும் மேற்பட்ட  ஊழியர்கள் நிலுவை சம்பளத்தை வழங்கும்வரை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில்  ஈடுபடப் போவதாக எச்சரித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக  இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் அரசை  வலியுறுத்தி உள்ளனர்.

Tags : strike ,sales staff ,
× RELATED 17,000 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்