×

காரைக்காலில் மாரத்தான் போட்டி

காரைக்கால், பிப். 4: புதுச்சேரி கலை மற்றும் விளையாட்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக, கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதில், முதல் மற்றும் மூன்றாம் இடத்தை ஏனாம் கல்லூரி மாணவிகள் பிடித்தனர்.  புதுச்சேரி கலை மற்றும் விளையாட்டு விழாவை, கடந்த 1ம் தேதி காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். நிறைவு நாள் நிகழ்ச்சியாக, மாநில அளவிலான கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நேற்று காரைக்கால் அரசு விளையாட்டு திடலில் தொடங்கியது. இப்போட்டியை அமைச்சர் கமலக்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில், அசனா எம்எல்ஏ, துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், முதன்மை கல்வி அதிகாரி அல்லி, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பாலாஜி, மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் கோவிந்தராஜன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 தொடர்ந்து, 6.8 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில், புதுச்சேரி, ஏனாம், காரைக்கால் பிராந்தியங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,200 மாணவிகள் கலந்து கலந்து கொண்டனர்.போட்டியின் முடிவில், முதல் இடத்தை ஏனாம் எஸ்.ஆர்.கே கல்லூரி மாணவி நீலிமாவும், 2ம் இடத்தை காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவி சுகுணாவும், 3ம் இடத்தை ஏனாம் எஸ்.ஆர்.கே கல்லூரி மாணவி உமா மகேஸ்வரியும் பிடித்தனர். அவர்களுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், 20 மாணவிகளுக்கு ரூ.500 ரொக்கமும், சான்றிதழ்களும், 80 மாணவிகளுக்கு ரூ.100 ரொக்கமும் சான்றிதழ்களை துணை ஆட்சியர் ஆதர்ஷ் வழங்கினார்.

Tags : Marathon Competition ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...