×

நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து போடப்பட்ட கல்குவாரி பாதை அகற்றம்

திருச்சுழி, பிப். 4: திருச்சுழி அருகே, தனியார் கல்குவாரிக்காக, நீர்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட பாதை, பொதுமக்கள் எதிர்ப்பால் நேற்று அகற்றப்பட்டது. திருச்சுழி அருகே உள்ள கோணப்பனேந்தல் கிராமத்தில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. தினசரி 200க்கும் மேற்பட்ட லாரிகள் குவாரியிலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு, புலியூரான் வழியாக பிற மாவட்டங்களுக்கு சென்று வந்தன. இதனால் சாலை பழுதாகி அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி, அவ்வழியாக லாரிகள் செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தனியார் குவாரி நிறுவனம் கோணப்பனேந்தல் கிராமத்தை ஒட்டிய நீர்வரத்துக் கால்வாயை மூடி புங்கன்குளம் கண்மாய் கரையில் சாலை அமைத்து, லாரிகள் சென்று வந்தன.   

இதனால், கடந்தாண்டு பெய்த மழைக்கு கண்மாயில் தண்ணீர் தேங்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், 100 ஏக்கர் நிலம் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனியார் கல்குவாரி நிறுவனத்திடம் பலமுறையிட்டும் பயனில்லை. மேலும், தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், குலசேகரநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் சிவமாரியப்பன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள், நீர்வரத்துக் கால்வாயை அகற்றக்கோரி, தனியார் கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த திருச்சுழி இன்ஸ்பெக்டர் மூக்கன், நீர்வரத்துக் கால்வாய் பாதை வழியாக குவாரி வாகனங்கள் செல்லாது என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் லாரிகளை விடுவித்தனர். பின்னர், நீர்வரத்துக் கால்வாயில் அமைக்கப்பட்ட பாதையை, ஜேசிபி உதவியுடன் அகற்றினர். இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags : waterway ,Kalkwari ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...