×

காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலய சப்பர பவனி ஏராளமானோர் பங்கேற்பு

காளையார்கோவில், பிப்.4:  காளையார்கோவிலில் உள்ள புனித அருளானந்தர் ஆலய திருவிழாவினையொட்டி சப்பர பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். காளையார்கோவிலில் உள்ள புனித அருளானந்தர் ஆலய திருவிழா கடந்த 24ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி மாலை நவநாள் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை  மறை மாவட்ட பொருளாளர் அருள்தந்தை சந்தியாகு தலைமையில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியசாமி உட்பட 30க்கும் மேற்பட்ட குருக்கள் இணைந்து ஆடம்பர திருவிழா திருப்பலியை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து புனித அருளானந்தரின் உருவம் தாங்கிய சப்பர பவனி தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து இறுதியாக ஆலயத்தை அடைந்தது.

இவ்விழாவில் காளையார்கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜராஜன் தலைமையில் சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன், மாவட்ட துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் உட்பட 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காளையார்கோவில் வட்டாட்சியர் சேதுநம்பு தலைமையில் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : St. Arulanandar Temple Sapara Bhavan ,
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்