×

தடை நீக்கப்பட்ட பிறகும் பத்திரப்பதிவு செய்ய முடியாத அவலம் கழனிவாசல், திருவேலங்குடி மக்கள் அவதி

காரைக்குடி, பிப்.4:  காரைக்குடி கழனிவாசல், திருவேலங்குடி பகுதிகளில் சிப்காட் அமைக்கப்பட இருந்ததால் அப்பகுதியில் இருந்து காலியிடங்களை பத்திரபதிவு செய்ய தடை இருந்தது. தற்போது சிப்காட் திட்டம் கைவிடப்பட்டதாக அரசு ஆணை பிறப்பித்தும் உரிய உத்தரவு வராததால் பத்திரம் பதிவு செய்ய மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி அருகே கழனிவாசல் குரூப் மற்றும் திருவேலங்குடி பகுதியில் சிப்காட் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2012ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ்  அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2015ம் ஆண்டு  இடம் கையகப்படுத்தும் பணி துவங்கப்பட்டது. இதன்படி கழனிவாசல் பகுதியில் 90.43 ஏக்கரும், திருவேங்குடி பகுதியில் 1162.81 ஏக்கரும் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் அரசு புறம்போக்கு 127.08 ஏக்கர், தனியாருக்கு சொந்தமாக நிலம் 1126.16 ஏக்கர். இதற்கு என அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

 இந்நிலையில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் முருகானந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்ட அரசாணையில், காரைக்குடி பகுதியில் ரயில், கப்பல் போக்குவரத்துக்கு உகந்த இடம் இல்லை. 2013 நில கையகப்படுத்தும் சட்டத்தின்படி நிலங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. 100 கி.மீ சுற்றளவுக்கு நிலையான தண்ணீர் வசதிக்கு ஏற்றார்போல் அணை, ஆறு போன்ற நீர்நிலைகள் இல்லை. இதனால் நிலத்தடிநீரை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். கனிம வளங்கள் இல்லை. தொழில் துவங்குவதற்கான சுற்றுச்சூழல் இல்லை. பெரிய தொழிற்சாலைகள் துவங்க ஏதுவாக சிறு, குறு தொழிற்சாலைகள் இல்லை. தொழிற்சாலை துவங்க தகுதியாக தொழிலாளர்கள் இல்லை என்பதை காரணம் காட்டி சிப்காட் துவங்குவதற்கான நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் தனியார் நில உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் சிப்காட் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டும் உரிய உத்தரவு வரவில்லை என காரணம் காட்டி  பத்திரம் பதிவு செய்ய மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து சமூக ஆர்வலர் பழனியப்பன் கூறுகையில், இப்பகுதியில் 5000க்கும் மேற்பட்ட காலிமனை இடங்கள் உள்ளன. சிப்காட் திட்டம் கொண்டு வரப்பட்டதால் நிலத்தை சொந்த தேவைகளுக்கு கூட விற்பனை செய்யமுடியாத நிலை இருந்தது.

தற்போது திட்டம் கைவிடப்பட்ட நிலையில் திருமணம், மருத்துவ சிகிக்சை போன்ற காரணங்களுக்கு விற்பனை செய்ய முற்படும் போது பத்திரம் பதிய முடியாது என்பதை காரணம் காட்டி மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட கலெக்டர் அரசு ஆணையை பத்திரபதிவு துறைக்கு அனுப்பி பதிவு செய்ய உரிய அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Thiruvelangudi ,
× RELATED நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு...