×

கள்ளிக்குடி தேர்தலில் பணியாற்றிய வீடியோகிராபர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு

திருமங்கலம், பிப். 4: கள்ளிக்குடி ஒன்றியத்தில் பிரச்னைக்குரிய பஞ்சாயத்துகளில் துணைத்தலைவர் தேர்தலில் பணியாற்றி வீடியோகிராபர்களுக்கு இதுவரையில் ஊதியம் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்துகளில் துணைத்தலைவர் தேர்தல்கள் மறைமுக தேர்தலாக நடைபெற்றது. இதனையொட்டி பிரச்னைக்குரிய பஞ்சாயத்துகளில் தேர்தல்களை வீடியோவில் ஒளிப்பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

இதன்படி பிரச்னை வரும் என எதிர்ப்பாத்த பஞ்சாயத்துகளில் மறைமுக தேர்தல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு சம்பளமாக ரூ.1000 பேசப்பட்டு அந்ததந்த பகுதியில் வீடியோகிராபர்களிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல்களில் 13 பஞ்சாயத்துகளில் பிரச்னை வரும் என எதிர்ப்பாக்கப்பட்டு வீடியோகிராபர்கள் பணியில் அமர்த்தப்பட்டு மறைமுக தேர்தல் நடந்தது. இதில் பணியாற்றிய வீடியோகிராபர்களுக்கு இதுவரையில் அதற்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து வீடியோகிராபர்கள் கூறுகையில், துணைத்தலைவர் தேர்தல் முடிந்தவுடன் அந்தந்த பிடிஓக்கள் ஊதியம் வழங்குவர் என கூறியிருந்தனர். ஆனால் கள்ளிக்குடியில் குறிப்பாக திருமால், கூடக்கோவில், மேலஉப்பிலிக்குண்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மறைமுக தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த வீடியோகிராபர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கவில்லை. அதேநேரத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என வீடியோ பதிவு சிடியை மட்டும் அதிகாரிகள் வாங்கி கொண்டனர். பிடிஓவிடம் கேட்டால் அந்தந்த ஊராட்சி செயலர்களிடம் சம்பளத்தை பெற்று கொள்ளும்படி கூறுகின்றனர். ஊராட்சி செயலர்களிடம் கேட்டால் பிடிஓதான் தரமுடியும், எங்களால் ஊதியம் வழங்கமுடியாது என கூறி மறுத்து வருகின்றனர். மறைமுக தேர்தல் முடிந்த மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் வீடியோகிராபர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளிக்குடியில் மட்டும் வழங்கப்படாமல் இழுத்தடித்து வருவது எங்களுக்கு மனவேதனையை தருகிறது. இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்’ என்றனர்.

Tags : Vandalographers ,election ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்