×

ஆட்டோவை பறிமுதல் செய்ததில் டிரைவர் தற்கொலை போலீசை கண்டித்து கலெக்டர் ஆபீஸ் முற்றுகை இழப்பீடு, அரசு வேலை கேட்டு மனு

மதுரை, பிப். 4: மதுரையில் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்ததால், தற்கொலை செய்து கொண்ட டிரைவரின் உடலை வாங்க மறுத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இழப்பீடு, அரசு வேலை கேட்டு குடும்பத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.  மதுரை, சோலையழகுபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த அரிச்சந்திரன் (45). ஷேர் ஆட்டோ டிரைவர். அவனியாபுரம்-மாட்டுத்தாவணி இடையே ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். ஆட்டோ சீட்டுகளின் அமைப்பை மாற்றியதாகவும், அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றி சென்றதாகவும் குற்றம்சாட்டி கடந்த ஜன.28ம் தேதி இவரது ஆட்ேடாவை அவனியாபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் வாழ்வாதாரம் பறிபோனதில் மனஉளைச்சலுக்குள்ளான அரிச்சந்திரன் வீட்டருகே டிரான்ஸ்பாரத்தின் மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரிச்சந்திரன் நேற்று முன்தினம் இறந்தார். பிரேத பரிசோதனை முடிந்து, உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.

மேலும் அரிச்சரந்திரன் இறப்பிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வேண்டும் என்றும், குடும்பத்தினருக்கு அரசு வேலை வேண்டும் என்றும், ஷேர் ஆட்டோக்களில் பயணிகளின் அனுமதியை 5+1 ஆக உயர்த்த வேண்டும் என்றும் ஆட்டோ டிரைவர்கள் கோரினர். தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 500க்கு மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அரிச்சந்திரன் குடும்பத்தினரும் சேர்ந்து மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்திற்குள் யாரும் செல்லாதவாறு வாசல் முன்பு இரும்பு தடுப்பு அரண் எற்படுத்தி இருந்தனர். மேலும் கலெக்டர் அலுவலக அனைத்து வாசல் கதவும் பூட்டப்பட்டிருந்தது. பின்பு ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் அரிச்சந்திரன் குடும்பத்தினர் மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அழைத்து சென்றனர்.

  போலீசாரின் நெருக்கடியால் கணவர் இறந்துவிட்டார். அவரின் இழப்பீடாக ரூ.25 லட்சமும், குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலை வேண்டும் என கோரி அரிச்சந்திரன் மனைவி சந்திரஜோதி, மகள் தமிழ்செல்வி, மகன் லோகுபாண்டியன் மற்றும் உறவினர்கள் கலெக்டர் வினயிடம் மனு கொடுத்தனர். அதேபோன்று, ஆட்டோ டிரைவர்கள் சங்கம் சார்பிலும் கோரிக்கை மனு கொடுத்தனர்.  மனுவை பெற்று கொண்ட கலெக்டர் இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். மனு கொடுத்து வரும் வரை 200க்கு மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.  இந்த போராட்டத்தால், கலெக்டர் அலுவலக ரோட்டில் காந்தி மியூசியம் அருகே தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்தை தடை செய்திருந்தனர்.

Tags : Collector ,
× RELATED வேலைக்கு வெளிநாடு செல்லும்...