×

சிவன்மலை தேர் திருவிழாவையொட்டி ஆத்தா குளத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

காங்கயம், பிப். 4:  காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலுக்கு செந்தமான ஆத்தா குளத்துக்கு இந்த ஆண்டு பி.ஏ.பி வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இதனால் முக்கிய விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதன் காரணமாக தினமும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இக்கோயிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என பொதுமக்களிடையே நம்பிக்கை உள்ளது. மேலும் ஆண்டு தோறும் தைப்பூசத் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இம்மாதம் 8ம் தேதி தேரோட்டம் துவங்கி 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக 10 ஏக்கர் பரப்பில் கோயில் கிரிவலப்பாதையையொட்டி ஆத்தா குளம் அமைந்துள்ளது.

 இந்த குளத்தையொட்டியுள்ள கிணற்றில் இருந்தும், ஆழ்குழாய் கிணற்றில் இருந்தும் தண்ணீர் எடுத்து மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேரோட்டத்துக்காக 20 நாட்களுக்கு முன்பே பி.ஏ.பி.கிளை வாய்க்காலில் இருந்து ஆத்தா குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் கோயிலுக்கு தண்ணீர் எடுக்கும் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்து கோடை காலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி பக்தர்களுக்கும் கோயில் பயன்பாட்டுக்கும் கிடைத்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கபடாததால் குளம் வறண்டுள்ளது. தை மாதத்தில் பழனிக்கு சென்று வரும் பக்தர்கள் அனைவரும் சிவன்மலைக்கும் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் இந்த ஆண்டும் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

 இது குறித்து சிவன்மலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு ஆத்தா குளத்துக்கு இதுவரை தண்ணீர் திறந்து விடப்படாமல் குளம் வறண்டு கிடக்கிறது. தற்போது பி.ஏ.பி வாய்க்காலில் தண்ணீர் செல்லும் நிலையில் குளத்துக்கு தண்ணீர் விட உடனடியாக அரசும், கோயில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : chariot festival ,pond ,Atha ,
× RELATED கண்டாச்சிபுரம் அருகே திரவுபதி அம்மன்...