×

ஆழியார் சோதனைச்சாவடி அருகே மதம் பிடித்த காட்டு யானை அட்டகாசம்

பொள்ளாச்சி,பிப்.4: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் சோதனைச்சாவடி அருகே  மதம் பிடித்த காட்டுயானை ஒன்று சுற்றித்திரிவதால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஆண்டில் பருவமழையை காலத்தில் அவ்வப்போது கனமழை பெய்தது. இதன் காரணமாக வனப்பகுதி மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் செடி,கொடிகள் பச்சை பசேல் என செழித்து வளர்ந்துள்ளது. இதனால், அடிக்கடி  நவமலை மற்றும் சர்க்கார்பதி உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதியிலிருந்து, யானைகள் கூட்டமாக ஆழியார் அணையை நோக்கி இரைதேடி வரத் துவங்கின.

அதிலும் கடந்த சில வாரமாக, அடர்ந்த வனத்திலிருந்து அவ்வப்போது யானைகள், ரோட்டிற்கு வந்து சென்றன. மேலும், அருகே உள்ள ஆழியார் அணைக்கு சென்று சாவகாசமாக  தண்ணீர் அருந்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் இரவு நேரத்தில் நவமலை வனத்திலிருந்து வெளியேறும்  ஒற்றை காட்டு யானையானது ஆழியார் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தது. சில நாட்களுக்கு முன்பு, ஆழியார் அணையின் பின்பகுதி ஜீரோ பாயின்ட் பகுதியிலிருந்து புளியங்கண்டி வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை விடிய,விடிய அப்பகுதியிலேயே சுற்றி வந்துள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவில், வால்பாறை ரோட்டில் உள்ள வனத்துறை சோதனை சாவடியருகே சுற்றித் திரிந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக்கு திடீர் என மதம் பிடித்துள்ளது. அந்த யானை அங்குமிங்குமாக உலா வந்ததுடன், வனத்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த பொருள் விளக்க மையத்தில் புகுந்து, அங்கிருந்த விளம்பர பலகைகள், சுற்றுலா பயணிகள் அமரும் நிழற்கூரை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது. பின் அந்த யானை, ஆழியார் குரங்கு அருவியருகே உள்ள ரோடு வழியாக நவமலை வனத்திற்குள் செல்லும்போது. அங்குள்ள சோதனைச்சாவடி தடுப்பு கம்பியை மிதித்து  சேதப்படுத்தியது. இதையறிந்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து, அந்த யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர். சிறிது நேரம் அங்குமிங்குமாக உலா வந்த யானை, அதிகாலையில் காட்டிற்குள் சென்றது.

  பகல் மற்றும் இரவு நேரத்தில், வால்பாறை ரோட்டில் யானை நடமாட்டம் இருப்பதால், அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். ஆழியார் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை நடமாட்டம் அடிக்கடி இருப்பதால், சுற்றுலா வரும் பயணிகளுக்கு  ஒலிபெருக்கி மூலம் யானை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Wild Elephant Atacasam ,Aliyar ,checkpoint ,
× RELATED வெளி மாநிலத்தவரை கண்காணிக்க வேலூரில் 2 இடங்களில் செக்போஸ்ட்