×

வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடைகளில் தொடர் கைவரிசை சிசிடிவி கேமரா மூலம் பெண் கைது

தண்டையார்பேட்டை: சென்னை கொண்டித்தோப்பு படவேட்டம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபிலால் (44). இவர், தனது வீட்டின் கீழ்தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த வாரம் வந்த ஒரு பெண், மோதிரம் மற்றும் செயின் வாங்க வேண்டும், என அங்கிருந்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவர்கள், கடையில் இருந்த பல்வேறு மாடல்களை எடுத்து அந்த பெண்ணிடம் காண்பித்துள்ளனர். அவற்றை எடுத்து அணிந்து பார்த்த அந்த பெண், நீண்ட நேரம் கழித்து, 2 கிராம் மோதிரம் மட்டும் வாங்கிவிட்டு சென்றார்.
சிறிது நேரம் கழித்து கடை உரிமையாளர், நகைகளை சரிபார்த்த போது, 12 கிராம் நகை மாயமானது தெரிந்தது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இதேபோல், கொண்டித்தோப்பு கிருஷ்ணப்பா டேங்க் தெருவை சேர்ந்த மாதவன் (37, அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு மொபட்டில் வந்த ஒரு பெண், 2 கிராம் கம்மல் வாங்கி சென்றார். பின்னர், நகைகளை உரிமையாளர் சரிபார்த்தபோது 25 கிராம் நகை மாயமானது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், சம்பவம் நடந்த கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, பர்தா அணிந்த ஒரு பெண், கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து, நகைகளை திருடிச் சென்றது  பதிவாகி இருந்தது. அவர் வந்த மொபட் நம்பரை வைத்து விசாரித்தபோது அவர், ராயபுரம் மாதா கோயில் தெருவை சேர்ந்த ரிகானா பைருல் நிஷா (43) என்பதும், கோபிலால், மாதவன் உள்ளிட்ட பல கடைகளில் நகை வாடிக்கையாளர் போல் நடித்து நகைகளை அபேஸ் செய்ததும் தெரிந்தது. இவரிடமிருந்து 4 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : jewelry stores ,customer ,
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி