×

பெல் வளாகத்தில் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை தொமுச பொதுக்குழுவில் தீர்மானம்

திருவெறும்பூர், ஜன.31: திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என தொமுச பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவெறும்பூர் அருகே பெல் தொமுச தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பேரவை பொதுச்செயலாளரும் தொமுச தலைவரும், எம்பியுமான சண்முகம் தலைமை வகித்து பேசினார். முன்னாள் எம்எல்ஏ சேகரன், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு, ஒன்றிய குழு துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். சங்க பொருளாளர் முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார்.

ஆலோசகர் சரவணவேல், துணைப் பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாசித்தனர். அதில் பெல் வளாகத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை அமைக்க வேண்டும். தொமுச தலைவர் சண்முகத்தை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்தற்கும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை திமுக முதன்மைச் செயலாளராக நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது, தொமுச 50வது ஆண்டு பொன்விழாவை போற்றும் வகையில் 50 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைப்பது, மத்திய, மாநில அரசுகள் தொடங்கும் அனல் மின் திட்டங்களுக்கு பெல் நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலும், ஓய்வு பெற்றவர்களையும் பணியமர்த்துவதை நிறுத்தி நிரந்தர தொழிலாளர்களை பணி அமர்த்த வேண்டும். விசாரணை இன்றி வேலை நீக்கம் செய்யும் நிலை ஆணை 63யை நீக்க வேண்டும்.

பெல் மருத்துவமனையில் நிரந்தர பணியில் செவிலியர்களை நியமிக்க வேண்டும். பெல் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பெல் ஊரகப்பகுதிகளில் பழுதடைந்துள்ள வீடுகளை பராமரிப்பு செய்வதோடு மிகவும் பழுதடைந்துள்ள வீடுகளை இடித்து விட்டு புதிதாக கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தொமுச தொழிற்சங்க தலைவர் சுப்புராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தொமுச பொதுச்செயலாளர் தீபன் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் திவாகர் நன்றி கூறினார்.

Tags : committee ,charity ,Bell Campus ,
× RELATED தீ தொண்டு நாள் வார விழா