×

தாரமங்கலம் ஒன்றியத்தை பாமக பிடித்தது

ஓமலூர்:  தாரமங்கலம் ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 11ம் தேதி மறைமுகத் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, சுயேச்சை பெண் உறுப்பினர் ஜானகியை கடத்தியதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதால், சட்டம் -ஒழுங்கை காரணம் காட்டி தேர்தல் அதிகாரிகள் இரு தேர்தலையும் ஒத்தி வைத்து அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. தாரமங்கலம் ஒன்றியத்தில் மொத்தம் 13 உறுப்பினர்கள் உள்ளனர். திமுக- 4, பாமக -4, அதிமுக -2, தேமுதிக -1, சுயேச்சைகள் 2 என வெற்றிபெற்றனர். இதில், ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு அதிமுக, சுயேச்சை ஆதரவுடன் பாமக உறுப்பினர் சுமதி பாபுவும், திமுக, தேமுதிக ஆதரவுடன் சுயேச்சை உறுப்பினர் லட்சுமி மாரியப்பனும் போட்டியிட்டனர். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுயேச்சை வேட்பாளர் ஜானகி, பாமகவிற்கு அதரவு அளித்ததால், சுமதி பாபு 7 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை உறுப்பினர் லட்சுமி மாரியப்பன் 6 வாக்குகள் பெற்றார்.

இதனைத்தொடர்ந்து ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. ஆனால், திமுக மற்றும் அதன் அதரவு உறுப்பினர்கள் மட்டும் உள்ளே வந்தனர். பாமக, அதிமுக உறுப்பினர்கள் வரவில்லை. மொத்தமுள்ள 13 உறுப்பினர்களில் 7 பேர் வரவேண்டும். ஆனால், 6 பேர் மட்டுமே வந்ததால், தேர்தலை ஒத்திவைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர்.  இதனால், திமுக உறுப்பினர்கள் வெளியே சென்றனர்.

Tags : Taramangalam ,Union ,
× RELATED சென்னையில் கஞ்சா வாங்குவது போல் நடித்து கஞ்சா வியாபாரியை பிடித்த போலீஸ்