×

கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

மேட்டூர், ஜன.31:  கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 12 வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவினர் 4 வார்டுகளிலும் அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் 6 வார்டுகளிலும், சுயேச் சைகள் இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் தாழ்த்தப்பட்டோர் எவரும் வெற்றி பெறவில்லை. இதனால், ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது. தலைவர் பதவி திமுகவிற்கு செல்லக்கூடாது என்பதால், கடந்த முறை அதிமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் 6 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 2 பேரும் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு வரவில்லை.

நேற்று மீண்டும் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது, திமுகவைச் சேர்ந்த 4 கவுன்சிலர்கள் மட்டுமே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அதிமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் சுயேச்சைகள் இருவரும் வரவில்லை. எனவே, போதிய கோரமில்லாத காரணத்தால் நேற்றும் 2வது முறையாக தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மேச்சேரி:  மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த 7 பேரும், பாமகவைச் சேர்ந்த 4 பேரும், சுயேச்சைகள் 3 பேரும், திமுகவைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர். கடந்த 11ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றை தினம் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் உரிய கோரம் இல்லை என கூறி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மீண்டும் ஒன்றியக்குழு துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உதவி தேர்தல் அலுவலர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் காலை முதல் அலுவலகத்தில் காத்திருந்தனர். ஆனால், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், 2வது முறையாக தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு அலுவலக பலகையில் ஒட்டப்பட்டது. ஜலகண்டாபுரம்:  நங்கவள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவடத்தூர் ஊராட்சியில், மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில், துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அப்போது, உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளாததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மீண்டும் தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 8வது வார்டு உறுப்பினரான முருகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்திரசாமி அறிவித்தார். வெற்றிபெற்ற முருகனுக்கு தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழப்பாடி: வாழப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கிபுரம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக திமுகவைச் சேர்ந்த ஈஸ்வரி சுந்தரம் வெற்றி பெற்றார். இதேபோல், குறிச்சி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த காட்டுராஜாவும், சின்னம்மநாயக்கன்பாளைம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த செந்தில்குமாரும் வெற்றி பெற்றனர். பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பனைமடல் ஊரட்சி மன்றத் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த தங்கமணி செந்தில் வெற்றி பெற்றார்.

Tags : Elections Committee Chairman ,
× RELATED மே 3ல் நடக்க இருந்த நீட் தேர்வு ஒத்திவைப்பு: மறு தேதி விரைவில் அறிவிப்பு