×

தமிழகத்தை கலக்கிய நீராவி முருகன் 50க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சேலம் கோர்ட்டில் ஆஜர்

சேலம், ஜன.31: கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் நீராவி முருகன் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். 2 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சேலம் சூரமங்கலம் பக்கமுள்ள பனங்காட்டை சேர்ந்தவர் நாகராஜ்(45). பைனான்ஸ் அதிபரான இவரை, கடந்த ஆண்டு மே 12ம்தேதி கந்தம்பட்டி பகுதியில், மர்ம கும்பல் கடத்திச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை தேடிவந்தனர். இந்நிலையில், 3 நாட்களுக்கு பிறகு, நாகராஜ் வீட்டிற்கு வந்தார். விசாரணையில், தன்னை கடத்தி சென்றவர்கள் ₹25 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், போலீசார் தேடுவதை தெரிந்துகொண்டு, ஆந்திர மாநிலம் சித்தூரில் இறக்கி விட்டு சென்றதாகவும்  தெரிவித்தார். போலீசாரின் தொடர் விசாரணையில், இளம்பிள்ளையை சேர்ந்த பிரம்மமூர்த்தி ஏற்பாட்டின்பேரில், பிரபல கொள்ளையன் தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன்(45)  தலைமையில் இந்த கடத்தல் நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பனங்காடு பகுதியை சேர்ந்த அருள், கவுதம், கணேசன், பிரம்மமூர்த்தி, குமாரபாளையம் தினேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் நீராவி முருகன், அவரது கூட்டாளி திருச்செங்கோட்டை சேர்ந்த ஈஸ்வரன் ஆகியோரை கோவை சிறையில் வைத்து கைது செய்தனர். இவ்வழக்கில் குஞ்சாண்டியூரைச்சேர்ந்த ரமேஷ் இன்னும் கைது செய்யப்பட வில்லை. நேற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நீராவி முருகன், ஈஸ்வரன் ஆகியோரை சேலம் அழைத்து வந்து, 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீசார் சுற்றி வளைத்த போது தப்பி ஓடிய நீராவிமுருகன், கீழே விழுந்ததில் ஒரு கால் முறிந்திருந்தது. அதற்கு கட்டு போட்டிருந்த நீராவி முருகனை, நீதிமன்றத்திற்குள் கொண்டு செல்வதற்காக போலீசார் வீல்சேர் ஒன்றை தனியார் மருத்துவமனையில் இருந்து வாங்கி வந்தனர். அதில் வைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு இன்ஸ்பெக்டர் செந்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் சிவா, 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து அவர்களை போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூர் பக்கமுள்ள நீராவியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தான் இந்த நீராவி முருகன். அதிபயங்கர கொள்ளையனான இவன் மீது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 21 வழக்குகள் உள்ளது. இதில் 2 கொலை வழக்காகும். வசதி படைத்தவர்களை கடத்திச்சென்று பணம் பறிப்பதில் கைதேர்ந்தவன். 1994 முதல் தனது கைவரிசையை காட்டி வருகிறான். சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்து சென்ற ஆசிரியை அணிந்திருந்த நகையை பறித்து சென்றான். அது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளை, வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளான். துரைப்பாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், புழல், மடிப்பாக்கம் என ஒவ்வொறு போலீஸ் ஸ்டேசன்களில் 14 வழக்குகள் இருக்கிறது. மேலும் ஈரோடு ஆப்பகூடல், தூத்துக்குடி மத்தி, வள்ளியூர் ஆகிய போலீஸ் ஸ்டேசன்களிலும் வழக்குகள் இருக்கிறது. தமிழகத்தில் கொள்ளையடித்துவிட்டு, ஆந்திராவில் சென்று பதுங்கி கொள்வான்.

சேலத்தில் துப்பாக்கி சூடு

கடந்த ஆண்டு, நீராவி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை ஈரோடு ஆப்பகூடல் போலீசார் துரத்தி வந்தனர். அப்போது சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், போலீசாருடன சுற்றிவளைத்தார். அப்போது கடத்தல் ஆசாமிகள், நாட்டு வெடிகுண்டை வீசினர். இதையடுத்து அவர்கள் மீது இன்ஸ்பெக்டர் துப்பாக்கி சூடு நடத்தினார். போலீசாரை காரைக்கொண்டு மோதுவதுபோல வந்து நீராவிமுருகன், காரில் தப்பி சென்றான்.

Tags : Steam Murugan ,Tamil Nadu ,Salem Court ,
× RELATED தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு