×

ராஜவாய்க்காலை புனரமைத்து நவீனமயமாக்கல் திட்ட வரைவு அறிக்கையை வெளியிட வேண்டும்

பரமத்திவேலூர், ஜன.31:  பரமத்திவேலூர் பகுதி விவசாயத்தின் நீர் ஆதாரமாக விளங்குவது ராஜவாய்க்கால் மற்றும் அதனைத் தொடர்ந்த பொய்யேரி, குமராபாளையம், மோகனூர் வாய்க்கால்களாகும். இந்த வாய்க்கால்களை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாய்க்கால்களை புனரமைப்பு செய்து நவீன மயமாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் அரசுக்கு  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாய்க்கால்களை புனரமைத்து நவீனமயமாக்குவதற்காக 184 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் வாய்க்கால்களின் முதல் கட்ட பணியை தொடங்குவதற்காக டெண்டர்  விடப்பட்டுள்ளதாகவும், வாய்க்கால்களில் தண்ணீரை நிறுத்தி பணியை தொடங்குவது குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதன்படி எதிர்வரும் மார்ச் 1ம் தேதி வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி ஜூலை 1ம் தேதி மீண்டும் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவது என முடிவு செய்யப்பட்டது. வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறது.

 நேற்று இரவு பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் வளாகத்தில் 17 ஊர் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் மாயாண்டி கண்டர் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கச் செயலாளர் பெரியசாமி, வையாபுரி, நன்செய் இடையாறு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராஜவாய்க்கால் புனரமைப்பு செய்து நவீனமயமாக்கல் திட்டம் குறித்த விரிவான அறிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். வாய்க்கால்களில் முதல்கட்ட பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் எந்த பகுதியில் தொடங்கப்படுகிறது என்பது குறித்தும் தெரியப்படுத்த வேண்டும். கலெக்டர் தலைமையில் அனைத்து விவசாய சங்கங்கள், மற்றும் விவசாயிகளை கூட்டி கருத்து கேட்க வேண்டும். நதி நீர் பாசன விவசாயிகளுக்கு ஷட்டர் அமைப்பது போல் நீரேற்று பாசன விவசாயிகளுக்கும் தண்ணீர் எடுப்பது குறித்த கட்டுப்பாடு வரைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : palace ,
× RELATED எனக்கு புற்றுநோய் உள்ளது… வீடியோ வெளியிட்ட பிரிட்டன் இளவரசி