×

அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி பிளஸ்2 செய்முறை தேர்வு பணி ஒதுக்கீட்டில் குளறுபடி

நாமக்கல், ஜன. 31: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 செய்முறை தேர்வு பணி ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. காலை ஆலோசனை கூட்டத்துக்கு பின் கொடுத்த உத்தரவு, மாலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 3ம் தேதி துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை, முதன்மை கல்வி அலுவலர் உஷாவின் ஆலோசனைப்படி, மூத்த முதுகலை ஆசிரியர்கள் மேற்கொண்டனர். நேற்று நாமக்கல் தெற்கு பள்ளியில் உள்ள கலையரங்கில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முதன்மை கல்வி அலுவலர் உஷா, ஒவ்வொரு பள்ளிக்கும் செய்முறை தேர்வு நடத்த நியமிக்கப்பட்டுள்ள அகத்தேர்வாளர்கள், புறத்தேர்வாளர்கள் நியமன உத்தரவை பள்ளி வாரியாக தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார். இந்த உத்தரவை பெற்றகொண்டு தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பினர்.

இந்நிலையில், நேற்று இரவு முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து புதிய உத்தரவு, அனைத்து பள்ளிகளுக்கும் இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், பிளஸ்2 செய்முறை தேர்வுகள் தொடர்பாக 30ம் தேதி (நேற்று) வழங்கப்பட்ட அகத்தேர்வாளர்கள் மற்றும் புறத்தேர்வாளர்கள் நியமன ஆணைகள் மற்றும் செய்முறை தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்த ஆணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. திருத்தப்பட்ட தேர்வாளர்கள் நியமன ஆணைகள் மற்றும் செய்முறை தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை பார்த்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர்.

உத்தரவு ரத்தானது எப்படி?

நேற்று அளிக்கப்பட்ட பணி நியமன ஆணையில்,  அரசு பள்ளிகளில் செய்முறை தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளுக்கு வெவ்வேறு தனியார் பள்ளி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணியின் கவனத்துக்கு, தமிழ்நாடு நேரடி நியமன முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு கொண்டு சென்றார். அரசு பள்ளிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களையும், தனியார் பள்ளிக்கு அரசு பள்ளி ஆசிரியர்களையும் தேர்வு நடத்த நியமிக்க வேண்டும் என அதில் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில், நேற்று மாலை முதன்மை கல்வி அலுவலர் உஷா, செய்முறை தேர்வு தொடர்பாக போடப்பட்ட உத்தரவை ரத்து செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டாக, அரசு பள்ளிக்கு அரசு பள்ளி ஆசிரியர்களும், தனியார் பள்ளிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களையும் வைத்தே, பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அப்போது, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தாலுகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், திருச்செங்கோடு, பரமத்தி, குமாரபாளையம் தாலுகாவில் உள்ள பள்ளிக்கும், அதே போல அங்குள்ள ஆசிரியர்கள் இந்த பகுதிக்கும் வந்து செய்முறை தேர்வினை நடத்தி சென்றனர். இந்த மாவட்டத்தில் பணியாற்றிய முதன்மை கல்வி அலுலவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செய்முறை தேர்வு பணியை ஒதுக்கினர்.

தற்போது தேர்வுத்துறை இயக்குனராக உள்ள உஷா ராணி, இந்த மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுக்கு முன் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றியவர். அதற்கு பிறகு 2 முறை இணை இயக்குனராக நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வினை கண்காணிப்பு அலுவலராக இருந்துள்ளார். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் இருந்து புகார் சென்றவுடன் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Government School Teachers ,
× RELATED ₹10 லட்சம் ஊக்கத்தொகையுடன் அண்ணா...