×

அரசு நிதி வழங்காததால் நலிந்தோர் நிதியுதவி திட்டம் நிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி

பரமக்குடி, ஜன.31:  பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நலிந்தோர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவர் இறந்தால் வழங்கப்படும்  ரூ.20 ஆயிரம் கிடைக்காமல் பெண்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக நலிந்தோர் நிதி உதவித்திட்டத்தின் கீழ் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.  குடும்ப தலைவர் இறந்தால் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 19 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில், குடும்பத் தலைவர் இறந்தால்,   ஆறு மாதத்திற்குள் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து நிதி உதவி பெற்றுக் கொள்ளலாம். பரமக்குடி தாலுகா அலுவலகத்தில், கடந்த 2013ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலும் 150க்கும் மேற்பட்டவர்கள் குடும்ப நிதி உதவி கேட்டு  விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் விண்ணப்பதாரர்களுக்கு நிதி உதவி  வழங்கப்படாமல் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து வருடக்கணக்கில் பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு வந்து அலைந்து செல்கின்றனர். இவர்களுக்கு  சமூக நலத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள்  முறையாக பதிலளிக்காமல் அலட்சியத்துடன், அநாகரிகமாக நடத்துவதாக புலம்புகின்றனர். தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றும் சமூக நலத்துறை ஊழியர்கள் சில விண்ணப்பதாரர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நிதி பெற்று தரவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

இதுகுறித்து விண்ணப்பதாரர் ஒருவர் கூறுகையில், “எனது கணவர் இறந்து   மூன்று ஆண்டுகள்  ஆகிவிட்டது. இரண்டு சிறிய  குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்வாதாரம் இல்லாமல் வீடுகளில் பாத்திரம் கழுவி சாப்பிட்டு வருகிறோம். குடும்ப நிதி கேட்டு மூன்று ஆண்டுகளாக தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருகிறேன். ஏற்கனவே கொடுத்த விண்ணப்பத்திற்கு நடவடிக்கை இல்லாத நிலையில்,  தாசில்தார் மாறும் பொழுது, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மனு  விண்ணபிக்க வேண்டியுள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுத்து கணவனால் கைவிடப்பட்ட எங்களுக்கு நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும்’’என்றார். இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், “குடும்பத் தலைவர் இறந்து விட்டால் வழங்கப்படும் நிதி உதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு,  தாலுகா அலுவலகத்தில் உள்ள அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பணம் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து நிதி வராததால் தாமதமாகிறது. அரசிடமிருந்து பணம் வந்தவுடன் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக நிதி வழங்கப்படும்’’ என்றார்.

Tags : public ,
× RELATED உயிர்காக்கும் கருவிகள் பற்றாக்குறை