×

சோலைமலை முருகன் கோயில் தைப்பூசப் பெருவிழா கொடி ஏற்றம்

அழகர்கோவில், ஜன. 31: அழகர்கோவில் மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடாக சோலைமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா ஒன்றாகும். இந்த விழா நேற்று காலையில் 10.35 மணிக்கு தங்க கொடி மரத்தில் மேள தாளம் முழங்க மயில் உருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது. இதில் நாணல் புல், வண்ண மலர்கள், மாவிலைகள் உள்ளிட்ட பொருட்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜைகள் சரவிளக்கு தீபாரதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று 31ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் நடைபெறும். பின்னர் உற்சவருக்கு மஹா அபிஷேகமும் யாகசாலை பூஜைகளும் மாலை 6 மணிக்கு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பின்னர் நாளை 1ம் தேதி காலை வழக்கம்போல் பூஜைகளும், மாலை 6 மணிக்கு காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

2ம் தேதி காலையில் வழக்கம்போல் பூஜைகளும் மாலையில் 6 மணிக்கு ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 3ம் தேதி மாலை 6 மணிக்கு பூச்சப்பர விழாவும் 4ம் தேதி காலையில் வழக்கம்போல் பூஜையும், மாலை 6 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 5ம் தேதி காலை வழக்கம்போல் பூஜைகளும் மாலையில் பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 6ம் தேதி காலை வழக்கம்போல் பூஜைகளும், மாலை 6 மணிக்கு குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். 7ம் தேதி காலை வழக்கம்போல் பூஜைகளும் தொடர்ந்து 10.30 மணிக்கு திருத்தேரோட்ட விழாவும், மாலை 6 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். 8ம் தேதி காலையில் யாகசாலை பூஜைகள் தீர்த்தவாரியும் 11 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறும். மாலை 5 மணிக்கு கொடி இறக்கம் நடைபெறும். மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாரதனையும் இருப்பிடம் சேருவதும் நடைபெறும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Solaimalai Murugan Temple The Taipusau Festival Festival Flag ,
× RELATED மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு