×

மகாத்மா காந்திக்கு அஞ்சலி

திண்டுக்கல், ஜன. 31: தேசப்பிதா மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தையொட்டி நேற்று திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் சொக்கலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத்தலைவர்கள் ராஜாஜி, அரபு முகமது, ஜபரூல்லா, செயலாளர் அபீப், சிறுபான்மை பிரிவு தலைவர் காஜாமைதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதி ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய ஒருமைப்பாடு இயக்கம் சார்பில் தலைவர் அப்துல் ஜாபர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் வின்சென்ட், பொட்டு செல்வம், காந்தி மன்ற பொது செயலாளர் மருது உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பசுமை புரட்சியை உருவாக்கிய சுப்பிரமணியன் 110வது பிறந்த தினத்தையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் காந்தி படத்திற்கு பேராசிரியர்கள், மாணவிகள் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காந்தியடிகள் தனது இன்னுயிரை பொருட்படுத்தாது பல்வேறு அகிம்சை போராட்டங்களை நடத்தி நமக்கு பெற்று தந்த சுதந்திரத்தை நினைவுபடுத்தி பேசினர்.

ஒட்டன்சத்திரம் வடகாடு ஊராட்சி மன்றத்தில் காந்தி நினைவுநாளையொட்டி தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி தலைமை வகித்து தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார். திண்டுக்கல் மாவட்டத்தை தொழுநோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவோம், அந்த முயற்சியில் பின் வாங்க மாட்டோம், தொழுநோய் என்பது எளிதில் குணமாகுவது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவரை கண்டறிந்து, சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வோம். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்ள மாட்டோம். நோய் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எந்தவொரு கலங்கத்தையும் உண்டு பண்ணாமல் பாகுபாடுகளை போக்கவும், அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் நல்லையா நன்றி கூறினார்.

Tags : Mahatma Gandhi ,
× RELATED எஸ்.பி.பியின் உடலுக்கு ஏராளமானோர்...