×

நோய் தாக்குதலால் கருகும் நெற்பயிர்கள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

திண்டுக்கல், ஜன. 31: நிலக்கோட்டை பகுதியில் நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் கருகி வருவதாகவும், வேளாண் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து. விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் பேசுகையில், ‘வேடசந்தூர் குடகனாறு பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கு முடிந்ததும் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாலாறு பொருந்தலாறு ஆயக்கட்டு பகுதிகளுக்கு கூடுதலான நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவது குறித்து ஆராய்ந்து அரசிற்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிமராமத்து திட்டப்பணிகள் நீண்ட காலத்திற்கு பயன்தரத்தக்க வகையில் குளங்களை முறையாக தொடர்ந்து பராமரித்திட அரசிற்கு வேளாண் பெருங்குடி மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும், மண் அரிப்பை தடுத்திடவும் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. 2020ம் வருட ஜனவரி மாதம் சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு 33.90 மிமீ ஆகும் இந்த மாதம் போதிய மழைப்பொழிவு இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகட்டுகளில் நீர் நிலவரம், வரதமாநதி அணையின் மொத்த கொள்ளளவு 66.47 அடி, தற்சமயம் நீர் இருப்பு 53.18 அடி, பாலாறு பொருந்தலாறு அணையின் மொத்த அளவு 65 அடி, தற்சமயம் நீர் இருப்பு 50.43 அடி, பரப்பலாறு அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி, தற்சமயம் நீர் இருப்பு 77.41 அடி, நங்காஞ்சியார் அணையின் மொத்த கொள்ளளவு 39.37 அடி, தற்சமயம் நீர் இருப்பு 12.63 அடி, குதிரையாறு அணையின் மொத்த கொள்ளளவு 80 அடி, தற்சமயம் நீர் இருப்பு 48.71அடி உள்ளது’ என்றார்.

இதில் வேளாண்துறை இணை இயக்குநர் பாண்டித்துரை, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிபாரதி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பார்த்தசாரதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கூட்டத்திற்கு நிலக்கோட்டை தாலுகா, விளாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் தனது கையில் கருகிய நெய்பயிர்களுடன் வந்தார். அவர் கூறுகையில், ‘நிலக்கோட்டை பகுதியில் அதிகமாக நெற்பயிர்தான் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது நோய் தாக்குதலால் நெற்பயிர் முழுவதும் கருகி வருகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் லாரியின் மூலம் தண்ணீர் வாங்கி ஊற்றி தான் விவசாயம் செய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே வேளாண்துறை அதிகாரிகள் நெற்பயிர் கருகுவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Peasants ,disease attack ,
× RELATED வேளாண் பொருட்கள் இறக்குமதியால்...