×

பழைய மாமல்லபுரம் சாலை கேளம்பாக்கம் - திருப்போரூர் இடையே சாலையின் இருபுறமும் காடுபோல் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்

திருப்போரூர், ஜன. 31: பழைய மாமல்லபுரம் சாலையின் இருபுறமும் உள்ள முட்செடிகள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. இதனை, உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கம் - திருப்போரூர் இடையே 8 கிமீ தூரம் உள்ளது. இந்த சாலையில் மாமல்லபுரம் நோக்கி செல்லும் வாகனங்களும், அங்கிருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்களும் செல்கின்றன. இதனால் காலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரை இச்சாலையில் அதிக வாகனப் போக்குவரத்து இருக்கும்.கேளம்பாக்கம், திருப்போரூர் இடையே தையூர் என்ற இடத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் உப்பளம் மற்றும் தனியார் வீட்டு மனைப்பிரிவுகள் உள்ளன. இந்த உப்பளம் தற்போது முறையாக செயல்படாததாலும், வீட்டு மனைப்பிரிவுகளில் இதுவரை யாரும் வீடு கட்டி குடியேறாததாலும் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

இந்த மரங்கள் பழைய மாமல்லபுரம் சாலையோரம் அதிகமாக வளர்ந்து வாகன ஓட்டிகளையும், அவர்களது கண்களையும் பதம் பார்க்கின்றன. சாலையின் ஒரு பகுதியையே மறைக்கும் அளவிற்கு இவை வளர்ந்துள்ளதால் கவனக் குறைவாக வரும் வாகன ஓட்டிகள் மீது இந்த சீமைக்கருவேல மரங்களின் கிளைகள் உரசி விபத்தை ஏற்படுத்துகின்றன.ஆனால், இந்த சாலையை பராமரிக்கும் நெடுஞ்சாலைத் துறை, போதிய அக்கறை செலுத்தாததால் சாலையின் இருபுறமும்காடு போல் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் கேளம்பாக்கம், திருப்போரூர் இடையே பழைய மாமல்லபுரம் சாலையின் இருபுறமும் காடுபோல் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.



Tags : Old Mamallapuram Road ,forest ,Kelambakkam - Thirupporeur ,road ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...