×

அரசு நிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிமுகவினர் கடும் எதிர்ப்பு

செங்கல்பட்டு, ஜன.31: செங்கல்பட்டு அருகே, அரசு நிலத்தில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.காட்டாங்குளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சி பாலு நகரில் குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. இதனால், குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனிடம் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தொகுதி மேம்பாட்டு நிதி ₹8.75 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்டார்.இதைதொடர்ந்து நேற்று முன்தினம் திம்மாவரம் பாலு நகர் பூங்கா அருகே ஆழ்துளை போர்வெல் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.அப்போது அங்கு வந்த அதிமுகவினர் சிலர், இந்த இடத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது, பொதுமக்கள் பயன்படுத்தும் படி வீடுகள் நிறைந்த பகுதியில் போர்வெல் அமைக்க வேண்டும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையறிந்ததும், முன்னாள் திமுக ஊராட்சி தலைவர் அருள்தேவி அங்கு சென்று, பொதுவான, அரசுக்கு சொந்தமான இடத்தில் போர்வெல் போடுகிறார்கள். இதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். மேலும் தனிநபர் வீட்டுமனைக்கு செல்வதற்காக அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை காப்பாற்றுவதற்காக, அதிமுகவினர் தடுக்கிறார்கள். இந்த இடம் பூங்காவுக்கு சொந்தமான இடம். அரசு இடம். இந்த இடத்தில் குடிநீர் நிலையம் அமைத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள் என கூறினார். இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, எஸ்ஐ மணிகண்டன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அருள்தேவி (திமுக ) ரமணி அன்பழகன், ராமன் (அதிமுக ) மற்றும் இருகட்சியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் தேவைக்காக போடப்பட்ட போர்வெல் பணியை அதிமுகவினரின் சுயநலத்துக்காக தடுப்பதாக திமுக தரப்பில் கூறப்பட்டது. அதிமுக தரப்பில் இந்த இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் போட வேண்டும, இந்த இடத்தில் வீட்டு மனைக்கு செல்லும் சாலை உள்ளது என தெரிவித்தனர்.பின்னர் போலீசார், அரசுக்கு சொந்தமான இடத்தில் போர்வெல் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது தற்காலிகமாக இந்தப் பணியை நிறுத்தி வைக்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்துவிட்டு பணியை தொடங்க வேண்டும் என கூறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Intellectuals ,state land refineries ,
× RELATED இங்கிலாந்தில் பல ‘அறிவுஜீவிகள்’...