×

பணி சுமையால் மன அழுத்தம் காவல் நிலையத்தில் தலைமை காவலர் மரணம்

திருப்போரூர், ஜன.31. திருப்போரூர் அடுத்த பையனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (56). திருப்போரூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.கடந்த 28ம் தேதி மாலை பணிக்கு சென்ற மூர்த்திக்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் வேலை முடிந்தது. பின்னர் மூர்த்தி, காவல் நிலைய முதல் மாடி ஓய்வறையில் உறங்குவதாக கூறி சென்றார்.நேற்றுகாலை 5 மணிக்கு இரவு ரோந்து பணி முடிந்து வந்த காவலர்கள், ஓய்வறைக்கு சென்றனர். அப்போது அங்குள்ள கழிப்பறையில் மூர்த்தி சடலமாக கிடந்ததை கண்டுஅதிர்ச்சியடைந்தனர்.தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 24 மணிநேர பணி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் நாள் காலை 6 மணிக்கு பணிக்கு வந்தால், அடுத்த நாள் காலை 6 மணி வரை 24 மணி நேரத்துக்கு பணி செய்ய வேண்டும். மேலும், ஒரு எஸ்ஐ குறைந்தபட்சம் வாகன விதிமீறல் வழக்குகள் 80 பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் காலை, மாலை நேரங்களில் போலீசார் வாகன வழக்குப்பதிவு செய்வதிலேயே கவனம் செலுத்தும்  நிலை உள்ளது. மேலும், பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அறிக்கை பெறுதல், நீதிமன்ற வழக்குகளை கண்காணித்தல் என பல்வேறு பணி நெருக்கடிகளும் உள்ளன. இந்த தொடர் பணி நெருக்கடியால் காவலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தற்போது இறந்துள்ள தலைமை காவலர் மூர்த்தி, கடந்த 2 நாட்களுக்கு முன், தனது மகன்களிடம் பணிச்சுமை அதிகம் இருப்பதால் விருப்ப ஓய்வு பெறலாம் என யோசிப்பதாககூறியுள்ளார். அதற்கு இன்னும் 2 ஆண்டுகள்தானே பொறுத்து கொள்ளுங்கள் என மகன்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.இந்த பணிச்சுமையின் மன அழுத்தத்தால்தான் தலைமைக்காவலர் மூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என சக காவலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மூர்த்தி கடந்த 2018ம் ஆண்டு சிறந்த தலைமை காவலர் விருதை காஞ்சி கலெக்டரிடம் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

64க்கு 13
திருப்போரூர் காவல் நிலையத்தில் 64 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால் தற்போது 13 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் போதிய காவலர்களும், அதிகாரிகளும் இல்லாததால் பலரும் 24 மணி நேரத்தை கடந்தும் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளதாக காவலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அஞ்சலி
செங்கல்பட்டு  மருத்துவமனை வளாகத்தில் தலைமை காவலர் மூர்த்தியின் உடலுக்கு செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன்,  கூடுதல் எஸ்.பி. பாலச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதைத்  தொடர்ந்து அவரது சொந்த ஊரான பையனூருக்கு உடல் எடுத்து  வரப்பட்டது.  அங்கு மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம்,  திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார்  அணிவகுப்பு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பையனூர் மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது காஞ்சிபுரம் சிறப்பு  ஆயுதப்படை போலீசார் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

Tags : Death ,Chief Guard ,Stress Police Station ,
× RELATED ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின்...