×

திருத்தணி சுற்றியுள்ள பகுதிகளில் பனி பொழிவால் விவசாய பயிர்கள் சேதம்

திருத்தணி, ஜன. 31: திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கடும் பனி பொழிவினாலும் விளை நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய அளவிற்கு மழை இல்லை. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட எந்த பயிர்களையும் பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் விவசாய நிலங்களை தரிசாக விட முடியாமல் தவிப்புக்கு உள்ளான விவசாயிகள் தங்களது நிலங்களுக்காக கடன் பெற்று உழவு செய்து மானாவாரி பயிர்களான எள், பச்சைப்பயிறு, உளுந்து போன்ற பயிர்களை நூற்றுக்கணக்கான ஏக்கரில் தண்ணீர் வசதியில்லாத நிலையில் விதைத்தனர். கடந்த ஒரு மாத காலமாக பயிர்கள் நன்றாக வளர்ந்தபோது திடீரென தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிரது. இந்த நிலை திருத்தணி, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் இருந்து வருகிறது.

இதனால் தங்கள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட மானாவாரிப் பயிர்களான எள், பச்சை பயிறு, உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகள் மற்றும் பூச்செடிகள் பனியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு கருகிவிட்டது. மகசூல் எடுக்க வேண்டிய நேரத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாங்கள் செய்த முதலீடுகள், உழைப்பிற்கு கூட பலன் கிடைக்காத நிலையில் விவசாயிகள் கவலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே தமிழக அரசும், வேளாண்மைத் துறையும், மாவட்ட கலெக்டரும் சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண தொகையை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : areas ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்