×

ஆரணியில் மாற்றுத்திறனாளி குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ தலைமையில் நடந்தது

ஆரணி, ஜன.31: ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ தலைமையில் நடந்தது. ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஆர்டிஓ மைதிலி தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் தமிழ்மணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லலிதா, கலசபாக்கம் தலைமையிடத்து தாசில்தார் தரணிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆரணி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆரணி, போளூர், ஜமூனாமரத்தூர், கலசப்பாக்கம் ஆகிய தாலுகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது: அனைத்து அரசு பள்ளிகள், ஆரணி தாலுகா, மகளிர் காவல் நிலையங்களில் சாய்வுதளம் அமைக்க வேண்டும், ஆரணி பழைய, புதிய பேருந்து நிலைத்தில் உள்ள நம் டாய்லெட், கிராமங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ-சேவை மையம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

தாலுகா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித்தொகை காத்திரப்பு பட்டியல் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தில் வழங்குகின்ற பிறப்பு, இறப்பு சான்றுகளுக்கு கொடுக்கும் மனுக்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.மேலும், மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்ய வங்கி கடன் வழங்க அனைத்து வங்கிகளும் மறுக்கின்றன. ஆரணி வட்டார தாலுகா அலுவலகத்தில் புதிய வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், வருமானம், வாரிசு சான்றுகளுக்கு விண்ணப்பித்து பல மாதங்களாகியும் சான்றுகள் பெறமுடியவில்லை. மாத மாதம் நடக்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை என்றனர். அதற்கு ஆர்டிஓ மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார். இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஆர்டிஓ மைதிலி மனுக்களை பெற்றுக் கொண்டார்.


Tags : RTO ,Transparency Grievance Redressal Meeting ,
× RELATED அனைத்து பஸ்கள் நின்று செல்ல ஆர்டிஓ உத்தரவு