×

விஷமிகளின் கூடாரமாக மாறியது பாழாகும் பாரம்பரியமிக்க சேரன்மகாதேவி சிவன் கோயில் பாலம் சீரமைத்து நுழைவு கேட் அமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

வீரவநல்லூர், ஜன. 31: குட்டி கும்பகோணம் என்றழைக்கப்படும் சேரன்மகாதேவியில் 9 சிவாலயங்கள், 9 பெருமாள் கோயில்கள் மற்றும் விநாயகர், அம்மன், முருகன், சாஸ்தா கோயில்கள், மாயாண்டி, சுடலை கோயில்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இதில் ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க காசி விஸ்வநாதர் கோயில், ராமர்கோயிலின் வடபுறம் பேரூராட்சி அலுவலகம் அருகே  உள்ளது. முன்னொரு காலத்தில் சேரன்மகாதேவி பகுதியில் ஆண் குழந்தைகள் பிறக்காமல் பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வம்சம் தலைக்க வழியில்லாமல் ஆண் குழந்தை பிறக்க வேண்டி இறைவனை வேண்டியுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சாது ஒருவர் மக்களிடம் காசிக்கு புனிதயாத்திரை சென்று அங்குள்ள காசிநாதரை மனமார வேண்டி காசிலிங்கத்தை கொண்டு வந்து இப்பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் ஆண் குழந்தைகள் பிறக்கும் என அருள்வாக்கு கூறியுள்ளார்.

இதையடுத்து சேரன்மகாதேவியை சேர்ந்த தம்பதி, காசிக்கு நடந்து புனிதயாத்திரை சென்று காசிலிங்கத்தை கொண்டு வந்து சேரன்மகாதேவியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து சேரன்மகாதேவி பகுதியில் மீண்டும் ஆண் குழந்தை பிறக்க துவங்கியது. அப்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட காசிலிங்கமே தற்போது காசி விஸ்வநாதர் சாமி கோயிலாக உருமாறி உள்ளதாக கோயிலின் வரலாறு கூறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க காசி விஸ்வநாதர் கோயிலின் வழியாகவே மயானப்பாதையும், ஆற்றுக்கு செல்லும் பாதையும் இருந்துள்ளது. காலப்போக்கில் ஆற்றுப்பாதையில் தார் சாலை அமைத்த பின்னர் மெல்ல மெல்ல இவ்வழிப்பாதையை பொதுமக்கள் தவிர்த்தனர். இருப்பினும் இக்கோயிலுக்கும் செல்லும் பக்தர்கள் வழிப்பாதையை முறையாக பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் கோயிலை தாண்டியுள்ள வழிப்பாதையில் புதர்மண்டியதால் ஆண்கள் இயற்கை உபாதைகளை கழிக்கும் இடமாக உருமாறியது.

கடந்த 1996ல் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி கோயில் மீண்டும் புனரமைக்கப்பட்டு வழிப்பாதை பளிச்சென மாறியது. தற்போது நித்யகால பூஜைகள் கோயிலில் தொடர்ந்து நடந்துவரும் நிலையில் கோயிலுக்கு செல்லும் வழிப்பாதையில் உள்ள ஓடைப்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைந்து விழுந்தது. இதனையடுத்து இரவு நேரங்களில் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் நிலை தடுமாறி விழும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கோயிலை தாண்டி உள்ள வழிப்பாதை தூர்ந்து போனதால் அவ்விடம் இயற்கை உபாதைகளை கழிக்கும் இடமாகவும், கோயிலை ஒட்டியுள்ள தெப்பக்குள படித்துறை மது அருந்துபவர்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்து போன பாலத்தை உடனடியாக சீரமைக்கவும், பாலம் ஆரம்பிக்கும் நுழைவு இடத்தில் கேட் அமைத்து பக்தர்கள் தவிர ஏனையோர் உள்ளே செல்ல முடியாதவாறு வழிவகை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.

சொக்கநாதருக்கும் சோதனை  சேரன்மகாதேவியில் உள்ள சிவாலயங்களில் கடைசி சிவாலயமான மீனாட்சி சொக்கநாதர் கோயிலானது, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வடபுறம் ராமசாமி கோயில் தெப்பக்குளக்கரையில் உள்ளது. இக்கோயிலானது பராமரிப்பின்றி சிதலமடைந்து கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. பாலத்தை சீரமைத்து நுழைவுவாயிலில் கேட் அமைப்பதன் மூலம் இக்கோயிலும் புத்துயிர் பெறும் என பக்தர்கள் நம்புகின்றனர். பொதுமக்களும் சமூக அக்கறையுடன் செயல்பட்டு இப்பகுதியை தூய்மையாக வைப்பதன் மூலம் இவ்விரு கோயில்களுக்கும் முறையாக பக்தர்கள் வருவர் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Devotees ,temple bridge ,Cheranmagadevi Shiva ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்